தஞ்சாவூர், நவ.18: டெல்லி போராட்டத்தில் இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு வரும் 26ம் தேதி தஞ்சையில் பேரணி நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், குறைந்தபட்ச ஆதார விலை, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது, விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும், டில்லி போராட்டத்தின் போது இறந்து போன விவசாயிகள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டியும் போராட்டம் தொடங்கிய நாளான நவம்பர் 26ம் தேதி அன்று நடைபெறும் நாடு தழுவிய பேரணி உள்ளிட்ட இயக்கத்தை அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து தஞ்சையில் சிறப்பாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை விளக்கி ஒன்றியம், நகரம், தஞ்சை மாநகரம் முழுவதும் நவம்பர் 22, 23 தேதிகளில் இரண்டு நாட்கள் பிரசாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில், ஒருங்கிணைப்பாளர்கள் முத்து உத்திராபதி, கண்ணன், காளியப்பன், ராமச்சந்திரன், வாசு, பழனியய்யா, ஏ.ஐ.டி.யூ.சி., நிர்வாகிகள் கோவிந்தராஜன், துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
The post டெல்லி போராட்டத்தில் இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி 26ம் தேதி பேரணி ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு appeared first on Dinakaran.