சென்னை: கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடும் வீராங்கனைகளின் ரத்த அழுத்தத்தில் கருத்தடை மாத்திரைகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சென்னை ஐஐடி மற்றும் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக் கழகமும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. சில கருத்தடை மாத்திரைகள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் கூடியவை என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் தசை உடற்பயிற்சி செய்யும்போது (சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப் பயிற்சி) ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதுவரை நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை. மேலும், மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படும் ஹார்மோன்களின் ஏற்றத் தாழ்வுகள் ரத்த அழுத்தத்தில் உண்மையிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது பற்றிய ஆராய்ச்சியும் தெளிவின்றி இருந்தது.
இளம் பெண்கள் (20-22 வயதுடையோர்) கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும்போதும், எண்டோஜெனஸ் கருப்பை ஹார்மோனில் (ஈஸ்ட்ரோஜன்கள் போன்றவை) ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்போதும் குறைந்த உடற்பயிற்சி, எலும்பு தசை உணர்திறன் நியூரான்களை செயல்படுத்துவதால் ரத்த அழுத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை ஆராய்ச்சிக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இதய மற்றும் ரத்தநாள நோய்கள் உள்ளவர்களில் மிகைப்படுத்தப்பட்ட ரத்தஅழுத்தப் பிரச்சனைகளுக்கு பங்களிப்பதாக அறியப்படுகிறது. அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மண்டா கெல்லர் ரோஸ், ஐஐடி மெட்ராஸ் உயிரித் தொழில்நுட்பத்துறை உதவிப் பேராசிரியர் நினிதா ஆகியோரை முதன்மை ஆய்வாளர்களாகக் கொண்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சி குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ் உயிரித் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியை நினிதா கூறியதாவது: பெண்கள் கருவுறுதலைத் தடுக்கவும், முகப்பரு, மாதவிடாய்ப் பிடிப்புகள், கருப்பை நீர்க்கட்டிகளின் அபாயத்தைக் குறைக்கவும் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். மார்ட்டின் உள்ளிட்ட சக ஊழியர்களின் ஆய்வின்படி, ஏறத்தாழ 70 சதவீத விளையாட்டு வீராங்கனைகள் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, அவை ரத்த அழுத்தத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. பெண்களின் உடற்பயிற்சியின் ரத்த அழுத்தம் ஏற்படுவதில் கருத்தடை மாத்திரைகளின் தாக்கத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதால் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பரவலான பயன்பாட்டையும் முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கின்றன என்றார்.
அமெரிக்காவின் மினியாபொலிசில் உள்ள மின்னசோட்டா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரான டாக்டர் மண்டா கெல்லர் ரோஸ் கூறுகையில், “உடற்பயிற்சியின்போது ஏற்படும் ரத்த அழுத்தங்கள் எந்த அளவுக்கு ஆயுள் முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து தங்களிடம் சில தகவல்கள் உள்ளதாக தெரிவித்தார். பெண்களுக்கு சுமார் 50 வயதாகும்போது கருப்பையில் ஹார்மோன் உற்பத்தியை நிறுத்தும் வகையில் மாதவிடாய் நிறுத்தம் நிகழ்கிறது. மாதவிடாய் நிறுத்த காலத்திற்குப் பின் பெண்களுக்கு இதயம் மற்றும் ரத்தநாளங்கள் தொடர்பான ஆபத்து அதிகரிக்கிறது. மாதவிடாய் நின்ற பெண்களின் இதய மற்றும் ரத்தநாளப் பாதிப்புகளுக்கு உடற்பயிற்சியின் போது ஏற்படும் ரத்த அழுத்தங்கள் ஒரு காரணியா என்பதைத் தீர்மானிக்கும் வகையில் எங்களின் அடுத்த கட்ட ஆராய்ச்சி அமையும்” என்று குறிப்பிட்டார்.
The post உடற்பயிற்சியில் ஈடுபடும் வீராங்கனைகளின் ரத்த அழுத்தத்தில் கருத்தடை மாத்திரைகள் ஏற்படுத்தும் தாக்கம்: ஆராய்ச்சியில் ஈடுபடும் சென்னை ஐஐடி appeared first on Dinakaran.