×

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றம் தீர்ப்பு கால் நூற்றாண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: வைகோ அறிக்கை

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, கால் நூற்றாண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அறிக்கை: தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தேன். 2019 பிப்ரவரி 18 அன்று உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் செல்லுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆலையை திறக்க கோரிய ஸ்டெர்லைட் மனு மீதான விசாரணை முடிவில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நேற்று முன்தினம்வெளியானது.

அதில், “வேதாந்தாவின் தொடர்ச்சியான மீறல்களும் தூத்துக்குடி ஆலையை வேறு வழியின்றி மூடும் நிலைக்கு உயர்நீதிமன்றத்தையும் சட்டப்பூர்வ அதிகாரிகளையும் தள்ளியது. இப்பகுதியில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் மிகவும் முக்கியமானது. அவர்களின் கவலைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது.” என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்து விட்டது.

ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு கடைசி ஆணியும் அறையப்பட்டுள்ளது. இது தூத்துக்குடியை பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து கால் நூற்றாண்டு காலம் நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கும், மதிமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் அயர்வும் சலிப்புமின்றி போராடியதற்கும் கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றம் தீர்ப்பு கால் நூற்றாண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: வைகோ அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,VICO Report ,CHENNAI ,Vaiko ,Madhyamik ,General Secretary ,Tuticorin ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் மருத்துவர்கள்...