×

பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கவுரவித்தது நைஜீரியா: அதிபர் டினுபுவை சந்தித்தார்

அபுஜா: நைஜீரியாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார். இதில் முதல்கட்டமாக நேற்று முன்தினம் இரவு நைஜீரியாவின் அபுஜாவுக்கு அவர் சென்றடைந்தார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் நைஜீரியா நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறை. அங்கு பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நைஜீரியாவின் 2வது மிக உயரிய தேசிய விருதான ‘கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் நைஜர்’ விருது பிரதமர் மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது. இதற்கு முன், கடந்த 1969ம் ஆண்டில் இங்கிலாந்து ராணி எலிசபெத் மட்டுமே இவ்விருதை வென்ற ஒரே வெளிநாட்டு தலைவர் ஆவார். விருதை பெற்ற பிரதமர் மோடி, ‘‘இந்த விருதை பெற்றதற்காக பெருமைப்படுகிறேன். இதை பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன். 140 கோடி இந்திய மக்களுக்கும், இந்தியா-நைஜீரியாவின் நட்புறவுக்கும் இவ்விருதை அர்ப்பணிக்கிறேன்’’ என்றார்.

வெளிநாடுகளில் இருந்து பிரதமர் மோடி பெறும் 17வது விருது இது. இதையடுத்து, நைஜீரியா அதிபர் போலா அகமது டினுபுவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது, இரு தலைவர்களும் தீவிரவாதம், கடற்கொள்ளையர் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராக கூட்டாக போராடுவதற்கும், உலகளாவிய தெற்கு நாடுகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்த இரு தலைவர்களும், இந்தியா-நைஜீரியா ஒத்துழைப்பை வர்த்தகம், முதலீடு, கல்வி, எரிசக்தி, சுகாதாரம், கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் விரிவுபடுத்தவும் ஒப்புக் கொண்டனர். பின்னர், நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவுக்கு இன்று செல்கிறார்.

 

The post பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கவுரவித்தது நைஜீரியா: அதிபர் டினுபுவை சந்தித்தார் appeared first on Dinakaran.

Tags : Nigeria ,Modi ,President Tinubu ,Abuja ,Brazil ,Guyana ,Abuja, Nigeria ,PM ,Tinubu ,
× RELATED டெல்லியில் இன்று நடைபெறும்...