×

பெண்ணாடத்தில் பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

 

விருத்தாசலம், நவ. 17: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் வீரம்மாள் குட்டை என்ற குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் அருகிலுள்ள அனைத்து வார்டு பொதுமக்களும் தாங்கள் வீடுகளில் பயன்படுத்தி வெளியேற்றும் கழிவு நீர் முழுவதும் இந்த குளத்தில் வந்து சேருகிறது.

இதனால் குளம், கழிவு நீர் குட்டையாக மாறி துர்நாற்றம் வீசி வருவதுடன், கொசுக்கள் அதிக அளவில் உருவாகி அருகிலுள்ள பொதுமக்களுக்கு பலவிதமான நோய்கள் வருகிறது. மேலும் கழிவுநீர் குளத்தில் சேராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கூறி வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மழை நீரும் குளத்தில் தேங்கி குளம் நிரம்பி வெளியேறும் நிலையில் உள்ளது. இதனால் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் அங்கு வசிக்க முடியாத சூழ்நிலை உள்ளதால் நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வீரம்மாள் குளத்தை சுற்றியும் பொதுமக்கள் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழை நீர் மற்றும் கழிவுநீர் வெளியே செல்லாமல் குளத்தில் சென்றடைகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளையும் சுற்றி கழிவு நீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post பெண்ணாடத்தில் பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Pennadam ,Vridthachalam ,7th Ward ,Pannadam Municipality ,Veerammal Guttai ,Pannaadam ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...