×
Saravana Stores

பனை மரம் நடுவதை ஊக்குவிக்க நடவடிக்கை: தமிழகத்தில் 35.45 பனை விதைகள் நட்டு பராமரிப்பு

* தமிழகத்தில் 6 கோடி பனை மரம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 9 கோடி பனை மரங்கள் இருந்ததாகவும், அதில் 6 கோடி மரங்கள் தமிழகத்தில் இருந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

சென்னை: தமிழகம் முழுவதும் இதுவரை 35 லட்சத்து 45 ஆயிரத்து 534 பனை விதைகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பனை மரங்கள் நிலத்தடி நீரை சேமிக்கவும், மண் அரிப்பையும் தடுக்க கூடியது. இதனால் பனை மரங்களை ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றின் கரைகளில் முன்னோர்கள் நடவு செய்து வளர்த்துள்ளனர். தற்போது இந்த மரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டதால் வறட்சி நிரந்தரமாகிவிட்டது. இதனால் இந்த மரங்களை மீண்டும் நடவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் மாநில மரமான பனையைப் பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்து வரலாறு படைத்த அரசு, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், பனை மரம் நடுவதை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் தொலைவுக்கான கடற்கரை ஓரங்களில் நடுவதற்காக கடந்தாண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரியம் தொடங்கப்பட்டது. இதில் பல்வேறு அமைப்புகள், நல வாரியங்கள், தன்னார்வலர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் இணைந்து பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2021-22 வேளாண் பட்ஜெட்டில் பனை மேம்பாட்டு இயக்கம் என்ற பெயரில் தனி இயக்கம் அறிவிக்கப்பட்டது.

அதன்மூலம், 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள், 1 லட்சம் பனங்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டன. 2022-23 வேளாண் பட்ஜெட்டின்படி, ரூ.2.02 கோடியில் இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மாவட்டம்தோறும் குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு முடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தூர்வாரப்பட்ட குளங்கள், கண்மாய்களின் கரைகளில் இந்த பனை விதைகளை இலவசமாக பெற்று நடவு செய்து கரைகளை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க அந்தந்த ஊரின் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் முன்வந்து செயல்பட தொடங்கியுள்ளன. அதன்படி கடந்த நவம்பர் வரை 35,45,534 பனை விதைகள் நடப்பட்டுள்ளன. அதில் அதிகப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் 3,121 தன்னார்வலர்கள் மூலம் 6,00,326 பனை விதைகள் நடப்பட்டுள்ளது. அதேபோல் விழுப்புரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சேலம், வேலூர், தென்காசி, கரூர், தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியாக பனை விதைகள் நடப்பட்டுள்ளன.

* அதிகப்படியாக நடவு செய்யப்பட்ட மாவட்டங்களின் விவரங்கள்
மாவட்டம் தன்னார்வலர்கள் நடவு
நாமக்கல் 3,121 6,00,326
விழுப்புரம் 1,133 5,17,036
சிவகங்கை 367 3,91,460
செங்கல்பட்டு 833 3,31,213
சேலம் 2,769 3,03,305
வேலூர் 244 2,52,384
தென்காசி 1,028 2,10,924
கரூர் 1,728 1,46,255
தர்மபுரி 1,101 1,36,990
கடலூர் 227 1,18,691

The post பனை மரம் நடுவதை ஊக்குவிக்க நடவடிக்கை: தமிழகத்தில் 35.45 பனை விதைகள் நட்டு பராமரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Chennai ,
× RELATED காவல்துறையில் பணிக்கு...