நெல்லை: நெல்லையில் அமரன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பினர். நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தபடத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் மர்ம நபர்கள் இருவர், அந்த தியேட்டரில் 3 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடி விட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள், வெடி சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடந்தன. இந்த சம்பவத்தில் தியேட்டரில் எந்த சேதமும் இல்லை. தகவலறிந்ததும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் வந்து தியேட்டரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இரு மர்ம நபர்கள் சாதாரணமாக நடந்து வருவதும், தியேட்டர் முன்பு வந்ததும் கையில் வைத்திருந்த 3 பெட்ரோல் குண்டுகளை தீப்பற்ற வைத்து எறிந்து விட்டு தப்பியோடும் காட்சிகளும் பதிவாகியிருந்தது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைதொடர்ந்து நேற்று காலையில் நடைபெற இருந்த இரு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. மாலை 3.30, மாலை 6 மணி காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டது. தியேட்டர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் சிலர், காலை 11 மணியளவில் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட தியேட்டருக்கு சென்று, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கண்டித்து முற்றுகை மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஜெயக்குமார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
The post ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் பெட்ரோல் குண்டுவீச்சு: நெல்லையில் பரபரப்பு appeared first on Dinakaran.