×
Saravana Stores

கழுதைப்பால் வியாபாரத்தில் முதலீடு எனக்கூறி ரூ.100 கோடி மோசடி செய்த நெல்லை கும்பல்: பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஐதராபாத் போலீசில் புகார்

திருமலை: யூடியூப் சேனலில் அதிக ஆர்டர்கள் வருவதாகவும், கழுதைப்பால் வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக நெல்லையை சேர்ந்த நிறுவனம் மீது பணம் கொடுத்தவர்கள் புகார் செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் முக்கடல் கிராமத்தை சேர்ந்த பாபு உலகநாதன் என்பவர் ‘டாங்கி பேலஸ்’ என்ற பெயரில் கழுதை பண்ணை ஒன்றைத்தொடங்கி உள்ளார். இதில் கூட்டாளிகளாக கிரிசுந்தர், சோனிக், பாலாஜி, டாக்டர் ரமேஷ் ஆகியோரை இணைத்துக்கொண்டு ஒரு லிட்டர் கழுதைப்பால் ரூ.1600 முதல் ரூ.1800 வரை வழங்குவதாக விளம்பரம் செய்தார். தொடர்ந்து யூடியூப் சேனல்களில் தனக்கு அதிகளவில் கழுதைப்பால் கேட்டு ஆர்டர்கள் வருவதாகவும், ஆனால் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியவில்லை என்று வீடியோ வெளியிட்டு மக்களை நம்ப வைத்தனர்.

கழுதை பால் வியாபாரத்தில் முதலீடு செய்தால் சாப்ட்வேர் வேலைக்கு செல்வதை காட்டிலும் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறிவந்துள்ளார். இதனை உண்மை என நம்பிய ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பலர், அந்த நிறுவனத்திற்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பினர். இதற்கிடையில் கழுதைப்பால் விற்பனையில் லாபம் பெறுவது தொடர்பாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் முதலீட்டாளர்களை கொண்டு பாபு உலகநாதன் குழுவினர், கருத்தரங்கு நடத்தியுள்ளார். இவர்களின் பேச்சால் கவர்ந்திழுக்கப்பட்ட பலர் இதில் இணைந்தனர். இதற்காக உறுப்பினர் சேர்க்கை கட்டணம் என்ற பெயரில் ரூ.5 லட்சம் வசூலித்துள்ளனர். மேலும் கழுதைகளுக்கு சிகிச்சைக்கான முதலீடு எனக்கூறி ரூ.50 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

மேலும், கழுதைகளின் பால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் வைத்தால் அது கெட்டுவிடும் என்பதால், அதனை பாதுகாக்க பிரிட்ஜ் வேண்டும் எனக்கூறி ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வசூலித்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1.5 கோடி என மொத்தம் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். ஆனால் இதுவரை முதலீட்டாளர்களுக்கு பணத்ைத திருப்பி தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஐதராபாத் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு நெல்லையை மையமாக கொண்டு பாபு உலகநாதன் குழுவினர், டாங்கி பேலஸ் என்ற நிறுவனம் தொடங்கி கழுதைப்பால் உற்பத்தி செய்து விற்பனை செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் எனவும், சோனிகா ரெட்டி என்ற பெண் மூலம் யூடியூப்பில் விளம்பரம் செய்தனர். முதலில் எங்களையே கழுதையை வாங்கிகொள்ளும்படி கூறிய அவர்கள், பின்னர் தாங்களே விற்பனை செய்வதாக கூறி ஒவ்வொரு கழுதைக்கும் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வாங்கிக்கொண்டு விற்பனை செய்தனர். பல்வேறு காரணங்கள் கூறி ஒவ்வொரு விவசாயியிடம் இருந்தும் சுமார் ரூ.40 லட்சம் வரை பெற்றனர்.

3 மாதத்திற்கு ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.1600 வழங்கினர். அதன்பிறகு பணம் தருவதை நிறுத்தி விட்டனர். நாங்கள் இழந்த பணத்தை பெற ஒன்றரை ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் மூலம் ரூ.100 கோடி வரை பறிகொடுத்துள்ளனர். எனவே நெல்லையை மையமாக கொண்டு நடந்த இந்த மோசடியை மேற்கொண்ட பாபு உலகநாதன், யூடியூப்பில் விளம்பரம் செய்து முதலீடு செய்ய வைத்த சோனிகா ரெட்டி, மார்க்கெடிங் செய்த கிரி சுந்தர், பாலாஜி, சபரிநாத் ஆகியோரை கைது செய்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டு தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

The post கழுதைப்பால் வியாபாரத்தில் முதலீடு எனக்கூறி ரூ.100 கோடி மோசடி செய்த நெல்லை கும்பல்: பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஐதராபாத் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Hyderabad ,Thirumalai ,YouTube ,Tirunelveli district ,Paddy ,Dinakaran ,
× RELATED ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள...