×

இந்த வார விசேஷங்கள்

விஷ்ணுபதி புண்ணிய காலம்
16.11.2024 – சனி

தமிழ் மாத கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வருகிறது. இன்று கார்த்திகை மாதம் விஷ்ணுபதி புண்ணியகாலம் பிறக்கப் போகிறது. இது ஏகாதசிக்கு நிகரான புனிதமான நாளாகும். இந்த நாளில் மகா விஷ்ணுவையும் தாயாரையும் நினைத்து வணங்க தீராத குடும்ப பிரச்னைகள் தீரும். இந்த நேரத்தில் செய்யும் அபிஷேகம், ஆராதனை, பூஜைகளுக்கு பல மடங்கு சக்தி உண்டு. இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள கொடி மரத்தை வலம் வர வேண்டும். கொடி மரத்தை சுற்றி வரும்போது கருவறை பிரகாரத்துடன் சேர்த்துதான் சுற்ற வேண்டும். மஞ்சள் மற்றும் கல் உப்பை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து பூஜை செய்து பிறகு அதை பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்தால் வறுமை அகலும். செல்வம் சேரும்.

முடவன் முழுக்கு
16.11.2024 – சனி

ஐப்பசி மாதம் முழுதும் கங்கையின் புனிதமான காவிரியில் நீராடுவது சிறப்பு. இதை துலா ஸ்நானம் என்பார்கள். இதன் மகத்துவத்தை அறிந்த கால் ஊனமுற்ற ஒரு பக்தர் எப்படியாவது ஐப்பசி மாதத்தில் துலா காவேரி ஸ்நானம் செய்யவேண்டும் என்று நீண்ட தூரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு நடந்து வந்துக்கொண்டிருந்தார். அவர் கால் ஊனத்துடன் நடந்து வந்ததால் அவர் மெதுவாக நடந்து மாயவரம் எனும் மயிலாடுதுறையை அடைவதற்குள் ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுகமும் வந்துவிட்டது. அன்று இரவுதான் அவரால் மயிலாடுதுறையை அடைய முடிந்தது. ஐப்பசி மாதம் கடைசி நாளன்று காவிரியில் புனிதநீராட முடியவில்லை. எனவே அவர் அந்த தலத்து இறைவனான மயூரநாத ஸ்வாமியிடம் ‘‘ஐப்பசி மாதமும் முடிந்து விட்டது. ஆனால், என்னால் காவிரியில் நீராட முடியாமல் போனதே’’ என்று முறையிட்டார். பிறகு மனக்கவலையுடன் அன்று இரவு அங்கே உள்ள மண்டபத்தில் உறங்கினார்.அவனது கனவில் தோன்றிய இறைவன் அந்த முடவனுக்குக் காட்சி தந்து, மனம் வருந்தவேண்டாம். கார்த்திகை முதல் தேதியாகிய நாளை காலை நீ காவிரியில் நீராடினால் ஐப்பசி மாதத்தில் நீராடிய புனித பலனை அடையலாம் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டாராம். அதன்படி அந்த முடவன் கார்த்திகை மாதம் முதல் நாளன்று காவிரியில் புனித நீராடி முக்தியடைந்தார் என்றும் இதுவே ‘‘முடவன் முழுக்கு’’ பெயர் வரக் காரணம் என்றும் கூறப்படுகிறது. எனவே முடவன் முழுக்குக்கு மாயவரம் காவிரியில் குளித்தல் சிறப்பு. காவிரிபூம்பட்டினத்தில் குளிப்பதும் விசேடம். இந்த இரண்டு இடங்களைத் தவிர்த்து காவிரியில் நீர் ஓடினால் எந்த ஊரிலும் குளிக்கலாம். காவிரியில் நீராடிவிட்டு அவசியம் அங்குள்ள அரச மரத்தை பிரதட்சணம் செய்ய வேண்டும். அருகாமையிலுள்ள கோயிலுக்கும் சென்று வழிபட வேண்டும்.

சபரிமலை மாலை போடுதல்
16.11.2024 – சனி

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளன்று சபரி மலையில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை தொடங்கியதையடுத்து, ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள். சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடுபவர்கள் குறைந்தபட்சம் 41 நாட்களாவது விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். மேலும், போடும் மாலையானது 108 துளசி மணி கொண்டதாகவோ அல்லது 54 ருத்ராட்ச மணி கொண்டதாகவோ இருக்க வேண்டும். அதில் ஐயப்பனின் டாலர் போட்டு, ஐயப்பன் சந்நதி உள்ள கோயிலுக்கு சென்று குருசாமி கைகளால் அணியலாம் அல்லது ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜை செய்து நாமே அணிந்து கொள்ளலாம்.
1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும் வரை முடிவெட்டுதல், சவரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
2. மெத்தை, தலையணை உபயோகிக்காமல், தரையில் துணி விரித்துப்படுக்க வேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது.
3. விரத நாட்களில் பெண்களை சகோதரியாகவும், தாயாகவும் கருத வேண்டும். விரதகாலத்தில் பிரம்மச்சாரியத்தை கடுமையாக கடைபிடிக்கவும். மனதளவிலும் பெண்ணை நினைக்கக் கூடாது.
4. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மாதவிலக்கானால் அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருக்க வேண்டும். அப்படி வசதி இல்லையென்றால் மாலை அணிந்தவர்கள் வேறு இடத்தில் தங்கியிருத்தல் நல்லது.
5. அணிந்திருந்த மாலை அறுந்துபோனால், அதை செப்பனிட்டு அணிந்து கொள்ளலாம். இதில் தவறில்லை. இருமுடி கட்டும் வைபவத்தை தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும்.
மங்கலமாகவும் இருக்கும்.
6. மாலை போட்ட பின் மது, புகை, அசைவ உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். சொல்லப் போனால், புகைப் பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது ஓர் சிறந்த வழியாக அமையும்.
7. எதிர்பாராமல் உங்கள் குடும்பத்தில் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்தால், நீங்கள் அணிந்துள்ள மாலையை சுவாமி ஐயப்பன் முன் வைத்துவிடுங்கள். மேலும், ஒரு வருடம் கழித்து நீங்கள் உங்கள்
யாத்திரையைத் தொடங்கலாம்.முதல் முறை மாலை போடுபவர்களை கன்னிசாமி என்று அழைப்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் ஒத்துழைப்போடு மாலை போட்டுக்கொள்ள வேண்டும். இன்னும் பல விதிகள் இருக்கின்றன. அவைகளை குருமார்களிடம் கேட்டு அதன்படி நடப்பது சிறந்தது.

திரு இந்தளூர் தீர்த்தவாரி
16.11.2024 – சனி

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் ஆழ்வார்களால் பாடப் பெற்ற 108 வைணவத் திருத்தலங்களுள் 26வது திருத்தலம். மாயவரத்தில் காவேரி கரையில் இருக்கிறது. இத்திருத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம். எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர். மாதப் பிறப்பு, அமாவாசை ஆகிய இரண்டு தினங்களில் கருடசேவை நடைபெறும் இத்தலத்தில் ஐப்பசியில் துலா பிரம்மோத்சவம் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இன்று தீர்த்தவாரி நடைபெறும்.

கார்த்திகை முதல் சோமவாரம்
18.11.2024 – திங்கள்

திங்கட்கிழமை என்பது ‘‘சோமவாரம்’’ என்றழைக்கப்படுகிறது. சிவபெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால், சோமவார விரதம் என்று பெயர் பெற்றது. இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கள் கிழமையிலிருந்து ஆரம்பித்து, கார்த்திகை மாதம் வரும் திங்கள்கிழமை அனைத்திலும் கடைப் பிடிக்க வேண்டும். தொழு நோய் ஏற்பட்டு, துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம் பெற்று சிறப்பு பெற்றான். அவனுக்குச் சிவபெருமான் அருள் புரிந்ததுடன், அவனை தனது முடிமேல் சூடிக்கொண்டு ‘சந்திரசேகரர்’ என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப் பிடிக்கின்றனர்.இந்த நாட்களில் சிவாலயங்களில் ‘சங்காபிஷேகம்’ நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டுகின்றனர். இன்று திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருக்கடையூர் போன்ற சிவாலயங்களில் ஆயிரம் சங்காபிஷேகம் நடைபெறும். கார்த்திகை சோமவார திருநாட்களில் சிவத்தலங்களைத் தரிசிப்பதும் கோடிபுண்ணியத்தைப் பெற்றுத் தரும். குறிப்பாக இறைவன் சிவனார், சந்திரனின் பெயரை ஏற்று அருள்பாலிக்கும் தலங்களைத் தரிசிப்பது விசேஷம்.

சங்கடஹர சதுர்த்தி
19.11.2024 – செவ்வாய்

இன்று செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கு அதிபதியாக முருகன் இருந்தாலும், அவருக்கு கிரக அந்தஸ்து விநாயகரால் கிடைத்தது என்பார்கள். எனவே, சங்கடங்களை போக்கும் சதுர்த்தி விரதம் செவ்வாய்க்குரிய விருச்சிக மாதத்தில் செவ்வாய்க்கிழமை வருவது சிறப்பு. மாத பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால், குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். அன்று கோயிலுக்குச் சென்று, சங்கடஹர சதுர்த்தி பூஜையில் பங்கேற்க வேண்டும். பூஜைக்குப் பின் வானத்தில் தெரியும் சந்திரனை தரிசனம் செய்ய வேண்டும். நம் வீட்டுப் பூஜை அறையில் இருக்கும் விநாயகருக்கு அறுகம்புல் சாத்தி வணங்க வேண்டும். விநாயகர் பூஜைக்குப் பின் சிற்றுண்டி சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். இந்த நாளின் இரவில் படுக்கையில் படுக்காமல் பாய், சாதாரண துணி ஆகியவை விரித்துத் தலையணை இன்றிப்படுக்க வேண்டும். மீண்டும் மறுநாள்காலை எழுந்து நீராடி பூஜை அறைக்குச் சென்று விநாயகரை தரிசித்த பின்னரே விரதம் பூர்த்தி ஆவதாக ஐதிகம்.

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் புறப்பாடு
22.11.2024 – வெள்ளி

பஞ்ச பர்வ உற்சவங்களில் ஒன்று வெள்ளிக்கிழமை உற்சவம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் ரெங்கமன்னார் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஆண்டாள் நாச்சியார் புறப்பாடு நடைபெறும். இன்று பெரும்பாலான பெருமாள் கோயில்களில் மாலையில் தாயார் புறப்பாடாகி கண்ணாடி அறை சேவையும், பின் 7 மணியளவில் அங்கிருந்து பிரகார புறப்பாடு நடந்து, பெருமாள் சந்நதி வாசலில் வந்து, பெருமாள் தாயார் கற்பூர ஆரத்தி நடக்கும். திரும்ப தாயார் தன் சந்நதிக்கு எழுந்தருள்வார். இன்று பெருமாள் ஆலயம் சென்று தாயாரை தரிசிப்பது நலம்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Vaikasi ,Avani ,Karthikai ,Masi ,Saturn ,Ekadasi ,
× RELATED திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம்:...