கோவை, நவ. 16: கோவை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால், மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, உக்கடம் காவல்நிலையம் முன்புறம் உள்ள என்.எச்.ரோடு-ஒப்பணக்கார வீதி சந்திப்பு,
கோட்டைமேடு வின்சென்ட் ரோடு, ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு, தடாகம் ரோடு முத்தண்ணன்குளம் அருகே, வடகோவை காமராஜர்புரம், சிந்தாமணி அருகே, திருச்சி ரோடு, சத்தி ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆடு, மாடுகள் சாலையோரம் சுற்றித்திரிவதுடன், போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளன என அடிக்கடி புகார்கள் வருகின்றன. இதை தவிர்க்கும் பொருட்டு, சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்காக, பிரத்யேக வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. பிடிபடும் மாடுகள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடைத்து வைக்கப்படும். பிடிபட்ட கால்நடைகளின் உரிமையாளர் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி அவற்றை மீட்டுச்செல்ல வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘’மாநகரில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க, புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வாகனத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஏற்றலாம். கால்நடைகள் முதல் இருமுறை பிடிபட்டால் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதே கால்நடைகள் மீண்டும் பிடிபடுவது தொடர்ந்தால், கோசாலையில் ஒப்படைக்கப்படும். கால்நடை உரிமையாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
The post போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் உரிமையாளருக்கு அபராதம்; மாநகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.