×

குமரியில் பெய்யும் தொடர் மழையால் தீவு கூட்டங்களுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் பேச்சிப்பாறை அணை


குலசேகரம்: தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான அணைகளுள் ஒன்று பேச்சிப்பாறை அணை. குமரி மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பரந்து விரிந்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் கோதையாற்றின் குறுக்கே பேச்சிப்பாறை பகுதியில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு கோதையாறு மட்டுமன்றி குற்றியாறு, கல்லாறு, சாத்தாறு, கிளவியாறு போன்ற ஆறுகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் நீரோடைகள் மூலம் தண்ணீர் வருகிறது. இந்த அணை 1897ல் கட்டத்தொடங்கி 1906ல் பயன்பாட்டுக்கு வந்தது. ஆரம்பத்தில் 42 அடி உயரம் கொள்ளளவாக இருந்தது. 1969ல் 48 அடியாக அதிகரிக்கப்பட்டது. சுமார் 100 மைல் சதுர பரப்பளவு நீர்பிடிப்பு பகுதிகளை கொண்டது. இந்த அணை நீர் பிடிப்பு பகுதிகளை சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலை அரண் போன்று உள்ளது.

நீர் பிடிப்பு பகுதிகளான யானை பூந்தி, கயிறுகட்டி, மங்களா மொட்டை, ஆளத்துகுன்று, வளஞ்ச ஆறு போன்ற பகுதிகள் அணை முழு கொள்ளளவை எட்டும் போது 100 அடி முதல் 120 அடி ஆழம் கொண்ட பகுதிகளாக உள்ளது. ஏராளமான பகுதிகள் 50 அடிக்கு அதிகமான ஆழம் கொண்ட பகுதியாகும். இந்த நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே சிறு, சிறு மலைகுன்றுகள், மண் திட்டுகள் உள்ளது. இவைகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் பெரும் பள்ளங்களாக உள்ளது. அணையில் நீர்மட்டம் குறையும் போது இந்த மலைகுன்றுகள் அனைத்தும் வெளியில் தெரியும். நீர் மட்டம் உயரும் போது உயரமான மலைகுன்றுகள் மட்டும் வெளியில் தெரியும். இந்த குன்றுகளை சுற்றிலும் நீர்வளம் உள்ள பகுதி என்பதால் மரங்கள் அடர்ந்து பச்சை பசேலென காட்சியளிக்கும். கடும் வெயில் காலங்களிலும் வெயிலின் தாக்கத்தை உணர முடியாத அளவு இதமான சூழல் நிலவும்.

சில ஆண்டுகளாக பருவ மழை சராசரியாக பெய்து வருவதால் அணையில் நீர் மட்டம் குறைவின்றி இருந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கோடை வெப்பம் வாட்டி எடுத்தாலும் தொடர்ந்து கோடைமழை, தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என மழை பருவம் தவறாமல் பெய்து வருகிறது. இதனால் எல்லா நீர் நிலைகளும் நிரம்பிய நிலையில் உள்ளது. பேச்சிப்பாறை அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு பெரும்பாலான நாட்களிலும் 35 அடிக்கு அதிகமான தண்ணீர் இருந்து வந்தது. தற்போது நிரம்பிய நிலையில் எல்லா பக்கங்களிலும் நீர் சூழ்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது, காற்றின் வேகத்தில் கடலில் அலை எழும்புவது போன்று அலை எழும்புகிறது. எல்லா பகுதிகளிலும் நீர் சூழ்ந்து காணப்படுவதால் நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள மலைகுன்றுகள் தீவுகளாக காட்சியளிக்கிறது.

அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் திரும்பிய பக்கங்கள் எல்லாம் இந்த தீவு கூட்டங்களை காண முடிகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது குளிர் சீசன் நிலவுவதால் காலை நேரங்களில் பனி பொழிவும் உள்ளதால் குளிர் பிரதேசங்களை போன்று ஜில்லென்று உள்ளது. மலைகளை உரசி செல்லும் மேக கூட்டங்கள், நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள தீவு கூட்டங்களை மூடி மறைக்கும் மேகங்கள் போன்றவை கண்களுக்கு விருந்தாக உள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர், இடையில் தீவுகள், பசுமையை போர்த்தியது போன்ற அழகு, நீலவானம், காட்டு விலங்குகளின் ஓசைகள், பறவைகளின் ரீங்கார குரல் இவைகளுடன் சுழன்று வீசி இதமான சூழலை ஏற்படுத்தும் தென்றல் போன்ற சூழல் பேச்சிப்பாறை அணைக்கு ரம்மியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

The post குமரியில் பெய்யும் தொடர் மழையால் தீவு கூட்டங்களுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் பேச்சிப்பாறை அணை appeared first on Dinakaran.

Tags : Pachiparai dam ,Kumari ,Kulasekaram ,Tamil Nadu ,Kumari district ,Western Ghats ,Godhai River ,Western Ghats… ,
× RELATED கற்கால மனிதர்கள் கற்கருவிகளை கூர்...