×

கொளக்காநத்தத்தில் அரசு கலை கல்லூரி

பாடாலூர், நவ. 15: கொளக்காநத்தத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமை க்க வேண்டும் என்று சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கருவூலம், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், போலீஸ் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள், கால்நடை மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், நூலகங்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. ஆனால் மிகவும் அவசிய தேவையான அரசு கலை அறிவியல் கல்லூரி மட்டும் இல்லை. மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் தாலுகா குரும்பலூரிலும், வேப்பந்தட்டை தாலுகா வேப்பந்தட்டையிலும், குன்னம் தாலுகா வேப்பூரிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. எனவே ஆலத்தூர் ஒன்றியத்தின் மைய பகுதியில் உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பல வருட கோரிக்கை.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், கொளக்காநத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களில் 90 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகிறோம். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோம். சுற்றுவட்டார பகுதியில் அரசு மேல்நிலை பள்ளிகள், தனியார் மேல்நிலை பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் இருந்து ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி பெற்று உயர் கல்வி கற்க செல்கின்றனர். இவ்வாறு தேர்ச்சி பெறும் மாணவர்கள் கலை அறிவியல் படிக்க வேண்டும் எனில் பெரம்பலூர் அல்லது அரியலூர் ஆகிய நகரங்களை நோக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக பெரம்பலூருக்கு சென்று வர ஒரு நாளைக்கு பேருந்துக்கு ரூ.150 செலவாகிறது. மேலும் இதர செலவுகளுடன் மாதத்திற்கு ரூ.6 ஆயிரம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசு இப்போது அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது. மாணவ, மாணவிகளின் உயர் கல்வி கனவு பாழாகி விடக்கூடாது என்பதற்காக அரசு இதை வழங்குகிறது. ஆனால் இந்த நிதி பஸ் கட்டணத்துக்கே செலவாகி விடுகிறது. கல்விக்கு பயன்படுத்த முடிவதில்லை.

எனவே பல நல்ல திட்டங்களை கல்வித்துறையில் செயல்படுத்தும் தமிழக அரசு இப்பகுதி மாணவ, மாணவிகளின் நலன் கருதி கொளக்காநத்தத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்தால் 40 கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்றனர்.

 

The post கொளக்காநத்தத்தில் அரசு கலை கல்லூரி appeared first on Dinakaran.

Tags : Govt Arts College ,Kolakanantham ,Badalur ,Government College of Arts and Sciences ,District Collector's Office ,District Development Office ,Treasury ,Government Hospital ,Government Arts College ,Kolakkanantha ,Dinakaran ,
× RELATED விஜயகோபாலபுரத்தில் புகையிலை பொருள் விற்ற வாலிபர் கைது