×

அமெரிக்க நாடாளுமன்றத்தையும் வசமாக்கியது குடியரசு கட்சி: உளவுத்துறை இயக்குனராக இந்து எம்பி நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் செனட் சபையில் வென்ற நிலையில், பெரும்பான்மை பெற்று நாடாளுமன்றத்தையும் டிரம்பின் குடியரசு கட்சி தன்வசமாக்கியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று அதிபராகியுள்ளார். ஜனவரி மாதம் அதிபர் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதனைமுன்னிட்டு டிரம்ப் தனது நிர்வாகத்தில் இடம்பெறும் நபர்களை தேர்ந்தெடுத்து வருகின்றார்.

இதில் துளசி காபார்ட்டை தேசிய உளவுதுறை இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹவாய் மாகாணத்தில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்ட துளசி அமெரிக்காவின் முதல் இந்து எம்பி ஆவார். ஆனால் துளசிக்கு இந்தியாவுடன் நேரடி தொடர்பு இல்லை. அவரது தாய் இந்து மதத்திற்கு மாறியவர். இவர் தனது இந்து மத நம்பிக்கையை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் கடந்த 2013ம் ஆண்டு பகவத் கீதையின் மீது கை வைத்து பதவி பிரமாணம் செய்துகொண்டார். அவரது முதல் பெயர் மற்றும் இந்து அடையாளம் அவரது இன பின்னணி பற்றிய தவறான எண்ணங்களுக்கு வழி வகுத்தாலும் அவர் அமெரிக்க சமோவா வம்சாவளியை சேர்ந்தவர். இதேபோல் மாட் காட்ஸ் அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரலாக தேர்வு செய்துள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய அதிபரானதை தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் நேற்றுமுன்தினம் வாஷிங்டன் திரும்பினார். இங்குள்ள கேபிடல்ஹில் ஓட்டலில் குடியரசு கட்சியினரை சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக ஏராளமானவர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முழக்கமிட்டு பாராட்டுக்களை தெரிவித்தனர். பின்னர் வெள்ளை மாளிகை சென்ற டொனால்ட் டிரம்ப், அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதிகார பரிமாற்றத்துக்கு முன் இதுபோன்ற சந்திப்பு நடப்பது வழக்கமாகும். இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியார்ரே செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அதிபர் பைடன் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சந்தித்தார். நாடு மற்றும் உலகம் எதிர்கொள்ளும் முக்கியமான தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு கொள்கை பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்” என்றார்.

இதனிடையே ஏற்கனவே தேர்தலில் செனட் சபையில் பெரும்பான்மை வாக்குகளை வென்று ஜனநாயக கட்சியிடம் இருந்து குடியரசு கட்சி அவையை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் காலிபோர்னியாவில் குடியரசு கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் அரிசோனாவிலும் கட்சி வெற்றி பெற்றதையடுத்து குடியரசு கட்சிக்கு பெரும்பான்மைக்கான 218 இடங்கள் கிடைத்துள்ளது. இதன் மூலமாக அமெரிக்கா நாடாளுமன்றத்தையும் குடியரசு கட்சி தனது கைவசம் கொண்டுவந்துள்ளது.

பைடன் – ஜின் பிங் சந்திப்பு
பதவி விலகும் அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜீ ஜின்பிங்ககை நாளை சந்தித்து பேசுகிறார். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டையொட்டி இரு தலைவர்களும் நாளை பெரு தலைநகரான லிமாவில் சந்திக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வது குறித்து பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிபராக பைடன் பொறுப்பேற்ற பிறகு இது அவர்களின் மூன்றாவது சந்திப்பாகும்.

The post அமெரிக்க நாடாளுமன்றத்தையும் வசமாக்கியது குடியரசு கட்சி: உளவுத்துறை இயக்குனராக இந்து எம்பி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Republican Party ,US Parliament ,Indu MP ,Director of Intelligence ,Washington ,Senate ,United States ,Trump ,House ,Donald Trump ,US ,presidential election ,
× RELATED டிரம்ப் நிர்வாகத்துடன் இணக்கமாக பணியாற்ற இந்தியா விருப்பம்