×

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு; தமிழ்நாடு அரசு மேல்முறையீடு: விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம்கோர்ட்

புதுடெல்லி: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா நிலப்பிரச்னை தொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசுபள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்கள் வக்கீல் பாசில், இன்ஜினியர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், இன்ஜினியர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம், கூலிப்படையை சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதில் பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட 7 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. இதே போல் மரணதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து 7 பேரும், ஆயுள் தண்டனை விதித்ததை எதிர்த்து மேரிபுஷ்பம், ஏசுராஜன் ஆகியோரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி மரணதண்டனை விதிக்கப்பட்ட 7 பேர், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் உள்பட 9 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும் பட்டப்பகலில் நடந்த பயங்கரமான கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உயர் நீதிமன்றம் எவ்வாறு விடுவித்தது?. இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம் விரைவில் தமிழ்நாடு அரசின் மனுவை விசாரிக்க உள்ளது.

The post மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு; தமிழ்நாடு அரசு மேல்முறையீடு: விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம்கோர்ட் appeared first on Dinakaran.

Tags : Doctor Subbiah ,Tamil Nadu Govt ,Supreme Court ,New Delhi ,Tamil Nadu government ,Dr ,Subbiah ,Raja Annamalaipuram, Chennai ,Doctor ,
× RELATED தேங்காய் எண்ணெய் சமையல் பொருளா? அழகு...