×
Saravana Stores

விடியல் பயணம் திட்டம் மூலம் மாவட்டத்தில் 1 கோடி பெண்கள் அரசு பேருந்துகளில் பயணம்

ஊட்டி, நவ. 14: தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், சமூக, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் சிறப்பான பங்களிப்பை உயர்த்தும் முயற்சியில், அரசு போக்குவரத்துக்கழக சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள ‘விடியல் பயணம் திட்டம்’ தொடங்கப்பட்டது.

மேலும் விடியல் பயணம் திட்டம் மூலம் ஏழ்மை நிலையிலுள்ள பெண்கள் வேலை, மருத்துவமனைகள் மற்றும் சமூக நோக்கங்களுக்காக பயணிப்பதற்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தி வருவதால் பெண்கள் சுயதொழில் தொடங்க அதிக வாய்ப்புகள் உருவாக்கியுள்ளதுடன், தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் தற்போது அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் பெண்கள் பயணத் தேவைகளுக்கு குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்து இருக்காமல் அவர்களின் தன்மேம்பாடு மற்றும் கௌரவத்திற்கு வழி வகுக்கிறது.

குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் அதிக அளவில் பயனடைவதோடு, இத்திட்டத்தினால் ஏற்பட்ட சேமிப்பின் மூலம் அவர்கள் சில்லறை பணவீக்கத்தின் தாக்கத்தினை எதிர்கொள்ளவும் உதவுகிறது. நகர்ப்புறங்களிலுள்ள புதிய கற்றல் திறன் வாய்ப்புகளை அணுகவும், குறைந்த செலவில் நகர்ப்புற இடங்களுக்கு சென்று வரவும், அவர்களின் சமூக நல்வாழ்வை மேம்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த சிறப்பான திட்டங்களில் ஒன்றான நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மூலம் நீலகிரி மாவட்டத்தில், 7-5-2021 முதல் 31-10-2024 வரை 71 ஆயிரத்து 902 மாற்றுத்திறனாளிகள், 1990 மாற்றுத்திறனாளி உதவியாளர்கள், 1670 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 1,00,54,057 மகளிர் என மொத்தம் 1.01 கோடி நபர்கள் இலவசமாக பயணித்து பயனடைந்துள்ளனர். மேலும், சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 25-2-2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

இத்திட்டமானது மலைப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு விகிதத்தை அதிகரிப்பதும், பொது போக்குவரத்தை ஊக்குவிப்பது ஆகும். மேலும் நகரப்பேருந்துகள் அதிகம் இல்லாத மலை மாவட்டமான நீலகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்ட மகளிரும் இலவசமாகப் பேருந்துப் பயணம் மேற்கொள்ள குறுந்தொலைவு (வழித்தட நீளம் 35 கி.மீ வரை) இயக்கப்படும் மலைப்பகுதிப் புறநகரப் பேருந்துகளில் ‘விடியல் பயணம்” திட்டத்தின் மூலம் 25-2-2024 முதல் 31-10-2024 வரை 88 லட்சத்து 26 ஆயிரத்து 700 மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.

விடியல் பயணத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளி புவனேஸ்வரி கூறுகையில், ‘‘நான் ஊட்டி காந்தள் பகுதியில் வசித்து வருகிறேன். நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். நான் வேலைக்கு செல்ல தினமும் பேருந்தில் தான் பயணம் செய்ய வேண்டும். எனவே எனக்கு ஒரு நாளைக்கு பேருந்து கட்டணமாக ரூ.30 வரை செலவாகும். இலவச பேருந்து கட்டணம் அறிவித்ததின் மூலம் எனக்கு போக்குவரத்து செலவிற்கான தொகை மீத மாகிறது. இதன் மூலம் பெண்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் பேருந்து பயண செலவின் தொகையை சேமித்து வைக்க முடிகிறது.

இது ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி’’ என்றார். பயனாளி சுகந்தி கூறுகையில், ‘‘நான் குன்னூர் பகுதியில் வசித்து வருகிறேன். நான் ஊட்டியில் உள்ள டெய்லரிங் கடையில் வேலை செய்து வருகிறேன். எனக்கு ஒரு நாளைக்கு பேருந்து பயண கட்டணம் ரூ.40 வரை செலவாகும். எனவே, அன்றாடம் வரும் வருமானத்திலிருந்து பேருந்து பயணத்தில் பயணம் செய்ய தேவையான தொகையை எடுத்து வைத்துக்கொள்வேன். தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு விடியல் பயண திட்டத்தினை செயல்படுத்தியதின் மூலம் கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகிறேன். எனவே பேருந்து கட்டணத் தொகையை எனது குழந்தைகளுக்காக சேமித்து வைத்துக்கொள்கின்றேன். இந்த சேமிப்பு தொகை பெண்களுக்கு தேவையான பொருட்களை வாங்க உதவுகிறது. பெண்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இந்த திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றி’’ என்றார்.

The post விடியல் பயணம் திட்டம் மூலம் மாவட்டத்தில் 1 கோடி பெண்கள் அரசு பேருந்துகளில் பயணம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Government of Tamil Nadu ,Government Transport Corporation ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடிகார...