×

பாஜவுடன் கூட்டணி: இருக்கு… ஆனா, இல்ல… நாளுக்கு நாள் பல்டி அடிக்கும் எடப்பாடி

கோவை: பாஜவுடன் கூட்டணி இல்லை என்று கூறிவந்த எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று சொன்னார். நேற்று மீண்டும் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்து நாளுக்கு நாள் பல்டி அடித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைத்து போட்டியிட்டு தோற்றது. அதன்பின், தமிழ்நாடு மாநில பாஜ தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாட்டில் ஊழலுக்காக கைதான ஒரே முதல்வர் ஜெயலலிதாதான் என்று கடுமையாக குற்றம்சாட்டினார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. இதில் அதிமுகவும், பாஜவும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தன. இந்நிலையில், பாஜ மேலிடம் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால், பாஜவுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த தலைவர்கள் ஆக்ரோஷமாக கூறி வந்தனர்.

இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன் மற்றும் முக்கிய நபர்கள் சம்பந்தப்பட்ட வீடு, தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சார்பில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இதனால் அதிமுக மூத்த தலைவர்கள் மீண்டும் பாஜவுடன் கூட்டணி வைக்க மறைமுகமாக வற்புறுத்தியுள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம். அதனால் பாஜ, நடிகர் விஜய் உள்ளிட்ட கட்சிகளை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி திடீர் தடை விதித்தார்.

இதை தொடர்ந்து கடந்த 10ம் தேதி திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் உங்கள் கூட்டணிக்கு பாஜவையும் பாமகவையும் வரவேற்க கதவைத் திறந்து வைத்துள்ளீர்களா என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு எடப்பாடி, “கதவை திறந்து வைப்பது, மூடி வைப்பது என்பதெல்லாம் அதிமுகவில் கிடையாது. மற்ற கட்சிகளில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். எங்கள் கட்சியின் கொள்கை அடிப்படையில் யார் விருப்பப்பட்டு சேருகிறார்களோ அவர்கள் எல்லாம் ஒத்த கருத்துடைய கட்சிகள்தான். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தேர்தல் வருகிறது. அரசியல் சூழல்களுக்கு தக்கவாறுதான் கூட்டணி வைக்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் யாருடன் கூட்டணி, யார் தலைமையில் கூட்டணி என்பது முடிவாகும். அதற்கு முன்பு எது சொன்னாலும் அவையெல்லாம் தேர்தல் வரை நிற்காது’’ என்றார். இதனால் பாஜவுடன் கூட்டணிக்கு ரெடி என்பதை எடப்பாடி மறைமுக கூறி உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. எடப்பாடியின் பேச்சை பாஜ முன்னாள் தலைவர் தமிழிசையும் வரவேற்று கூட்டணிக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளை தவறுதலாக விமர்சனம் செய்தது கிடையாது. ஆனால், எங்களை பற்றி எதிர்க்கட்சியினர், ஆளும் கட்சியினர் தவறுதலாக விமர்சனம் செய்தால் தக்க பதிலடி அளிக்கப்படும். இந்திய அளவில் உள்ள கட்சிகள் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்வதில்லை. ஆனால், அதிமுகவில் முறையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்கு பிறகுதான் தேர்தல் வர இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்பதுதான் எங்களது நிலைப்பாடு. இதனை வைத்து விவாதம் செய்ய முயற்சி செய்ய வேண்டாம். ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அதிமுக தும்மினால், இருமினால்கூட விவாத மேடை அமைக்கின்றனர். அதிமுக இருப்பதால்தான் விவாத மேடை நடக்கிறது. ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்ற நிலைப்பாடு இருக்கக்கூடாது. உண்மை செய்தியை நடுநிலையுடன் ஊடகங்கள் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது பாஜவுடன் கூட்டணி இல்லை என்று கூறி உள்ள எடப்பாடி பழனிசாமி, வடிவேலு பட பாணியில் பாஜவுடன் கூட்டணி இருக்கு… ஆனா, இல்லை என்று நாளுக்கு நாள் பல்டி அடித்து பேசி வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பாஜவுடன் கூட்டணி: இருக்கு… ஆனா, இல்ல… நாளுக்கு நாள் பல்டி அடிக்கும் எடப்பாடி appeared first on Dinakaran.

Tags : BAJA ,BALDI ,Adappadi Palanisami ,BJP ,Tamil Nadu ,
× RELATED உ.பி.யில் பழமையான மசூதியை இடித்து பாஜ...