உத்திரமேரூர்: உத்திரமேரூர் காவல் நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. எனவே, அவற்றை ஏலம் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட, சதுக்கம் பகுதியில் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த காவல் நிலையம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது, காவல் நிலைய கட்டிடம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால், தனியார் கட்டிடத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது. உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட கிராமங்கள், உத்திரமேரூர் காவல் நிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்த காவல் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக திருட்டு, விபத்து மற்றும் சட்டவிரோத பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலைய பின்புறத்தில் திறந்தவெளியில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டிகள் என பல்வேறு வாகனங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் மக்கி வீணாகி வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மேலும், கேட்பாரற்று கிடப்பதால் வாகனங்களில் உள்ள உதிரி பாகங்கள் சமூக விரோதிகளால் திருடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்களை ஏலம் விடாமல் வைத்திருப்பதால் வாகனங்கள் துருப்பிடித்து வீணாவதுடன் ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், காவல் நிலையம் அருகில் வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களில் செடி, கொடிகள் வளர்ந்து அதிலிருந்து குடியிருப்புகளுக்குள் விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்து குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தி வருகின்றன. எனவே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post உத்திரமேரூர் காவல் நிலையத்தில் துருப்பிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்: ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.