- செங்கல்பட்டு மாவட்டம்
- செங்கல்பட்டு
- மாவட்டம்
- கூட்டு
- விவசாயம்
- கூட்டு இயக்குனர்
- செல்வபாண்டியன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கு வரும் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செல்வபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் 2024-25ம் ஆண்டில் சம்பா நெற்பயிருக்கு (சிறப்பு பருவம்) பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பயிருக்கு காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்ற காப்பீட்டு நிறுவனத்தின் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா நெல் பருவ சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கு கடந்த 15ம் தேதிவரை அவகாசம் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சம்பா நெற்பயிர் காப்பீடு செய்வதற்கு வரும் 30ம் தேதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கடைசி தேதிவரை காத்திருக்காமல் விவசாயிகள் முன்னதாகவே பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இதற்கு காப்பீடு கட்டணமாக, ஏக்கருக்கு ரூ.51,750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விருப்ப கடிதத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ வழங்கி, தங்களின் சம்பா பயிரை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
கடன் பெறாத விவசாயிகள் இ-சேவை மையங்களிலோ, www.pmfby.gov.in என்ற தேசிய பயிர் காப்பீட்டு இணையதள முகவரியிலோ விவசாயிகள் வரும் 30ம் தேதிக்குள் பயிர் காப்பீட்டுக்கு பதிவு செய்து கொள்ளலாம். இப்பதிவின்போது முன்மொழி பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலரின் நடப்பு பசலிக்கான அடங்கல் விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளையோ அல்லது திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகி பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
The post செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பயிர் காப்பீட்டுக்கு கால அவகாசம் நீட்டிப்பு: வேளாண்துறை தகவல் appeared first on Dinakaran.