×

செங்கையில் மக்கள் குறைதீர் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 312 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மதுராந்தகம் வட்டம், பெரும்பேர்கண்டிகை கிராமத்தினை சார்ந்த 13 இருளர் பயனாளிகளுக்கு புதியதாக பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை இடர்பாடுகளால் உயிரிழந்த 2 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண தொகையாக தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் நிதியுதவியும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.63 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை கால் மற்றும் வீல் சேர்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்பில் பயின்றும், தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தினை பயன்படுத்தியும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட உதவிப் பொறியாளர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று மின் வாரியத்தில் பணிநியமனம் பெற்ற தன்னார்வ பயிலும் மாணவர் யுவராஜ்க்கு மாவட்ட கலெக்டர் நினைவுபரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காஜா சாகுல் ஹமீது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன், உதவிஆணையர் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் கதிர்வேலு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் வேலாயுதம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post செங்கையில் மக்கள் குறைதீர் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Meeting ,Chengalpattu ,District Collector ,Arunraj ,People's Grievance Meeting ,People's Grievance Redressal Day ,District Collector's Office ,District ,Collector ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி