சென்னை: பட்டியலின, பழங்குடியினருக்கான காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிக்கை: நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 2024ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிகள் தேர்வு மூலம் பட்டியலின, பழங்குடியினருக்கான குறைவு காலிப்பணியிடங்களை நிரப்ப 50 தேர்வர்களை தேர்வு செய்துள்ளது.
மேலும், 2024ம் ஆண்டு, குரூப்-1 தேர்வு மூலம் 12 குறைவு காலிப்பணியிடங்களையும், குரூப்-2, 2ஏ தேர்வு மூலம் 135 குறைவு காலிப்பணியிடங்களையும், குரூப்-4 தேர்வு மூலம் 434 குறைவு காலிப்பணியிடங்களையும் ஆக மொத்தம் 581 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப பணிகளிலும் குறைவு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பட்டியலின, பழங்குடி காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.