கோபி: கோபி பங்களாபுதூர் சாலையில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபியில் இருந்து பங்களாபுதூர் செல்லும் சாலையில் தடப்பள்ளி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் கரையில் உள்ள விவசாய நிலங்களுக்கு சிறிய வாய்க்கால் மூலமாக தண்ணீர் வழங்கப்படுகிறது. விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீரை தவிர மீதமுள்ள உபரி நீர் வெளியேறி சாலையின் மறுபுறம் உள்ள தடப்பள்ளி வாய்க்காலில் சென்றடையும் வகையில் குழாய் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழாய் பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு சாலையில் பெரிய பள்ளம் உருவானது.
இந்த பள்ளம் எஸ் வடிவ வளையில் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் குழியில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் தற்காலிகமாக சாலையின் குறுக்கே தடை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால், அந்த பகுதியில் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால், உடனடியாக உடைந்த குழாய் பாலத்தை அகற்றி விட்டு நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கோபி அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.