×

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகல்?

இஸ்லாமாபாத்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகலாம் என வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளது. அதற்காக தங்கள் நாட்டில் உள்ள கிரிக்கெட் மைதானங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு புதுப்பித்து முடித்துள்ளது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகளில் முக்கிய அணியான இந்தியா, பாகிஸ்தான் செல்ல இந்திய அரசு அனுமதிக்கவில்லை என கூறி இருக்கிறது. இதன் மூலம், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் நடந்தால், அதில் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ மறைமுகமாக உணர்த்தி இருக்கிறது. அதனால், இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அதற்கு ஒப்புக்கொள்ளாமல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் மல்லுக்கட்டி வருகிறது. இந்தியா இந்த தொடரில் இருந்து விலகினால் அது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். இந்தியா விளையாடுவதால் இந்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் பல நூறு கோடிகளுக்கு விற்கப்பட்டு இருக்கிறது. அதனால், இந்தியா இந்த தொடரில் பங்கேற்காமல் போனால் அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்தலாம் என்ற ஆலோசனையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அளித்து உள்ளது. அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக இந்தியா ஏன் பாகிஸ்தான் வர மறுக்கிறது? என விளக்கம் கேட்டு இருக்கிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரை வேறு நாட்டுக்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முயன்று வருவதாக கூறப்படுகிறது. தென்ஆப்பிரிக்காவை அதற்காக முதற்கட்டமாக தேர்வு செய்து உள்ளது. அப்படி செய்தால் பாகிஸ்தான் இனி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்க மாட்டோம் என்ற முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான வருவாய் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வருவாய் இழப்பு என்பது மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதால் பாகிஸ்தான் இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை தங்கள் வழிக்கு கொண்டுவர முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

The post சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகல்? appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Champions Trophy series ,Islamabad ,2025 Champions Trophy ,Pakistan Cricket ,Champions Trophy ,Dinakaran ,
× RELATED சாம்பியன் டிராபி தொடருக்கு...