×
Saravana Stores

கோத்தகிரியில் நீரோடையில் மலைபோல குவிந்த குப்பைகள்; மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ளுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி : கோத்தகிரியில் நீரோடையில் மலை போல் குவிக்கப்பட்டுள்ள குப்பை குழியால் பொது மக்களுக்கு தோல் நோய் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்ப்பும் கோரிக்கையும் எழுந்துள்ளது.

கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கோத்தகிரி பேரூராட்சியில் தினசரி சேகரிக்கும் குப்பைகள் அனைத்தும் இந்த பகுதியில் கொட்டப்படுகிறது. தினசரி டன் கணக்கில் குப்பைகளை இந்த பகுதியில் உள்ள நீரோடையில் கொட்டி வருகின்றனர். இதனால் சுற்றுசூழல் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது.

மழைக்காலங்களில் குப்பைகள் நீரோடையில் கலந்து செல்வதால் வன விலங்குகள் தண்ணீரை பருகுவதால் அவற்றிற்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி கண்ணிகாதேவி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குப்பை குழியில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஈக்கள் மொய்ப்பதால் உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கோத்தகிரி பேரூராட்சியில் புகார் அளித்தால் இந்த பகுதி நிலச்சரிவு அபாயம் உள்ளது என கூறி அனைவரையும் காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கோத்தகிரி பகுதியில் முக்கிய நீரோடையில் மலைபோல குப்பைகளை குவித்து வைத்துள்ளதால் துர்நாற்றம் காற்றில் பரவி குழந்தைகளுக்கு தோல் நோய் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். கழிவு நீர் குடி நீரில் கலப்பதால் பல நாட்கள் குடிநீர் இன்றி பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தினசரி வன விலங்குகளான கரடி, காட்டு மாடு உள்ளிட்டவை குப்பைகளை உண்டு செல்வதால் அவற்றிற்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு குப்பைகளை மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோத்தகிரியில் நீரோடையில் மலைபோல குவிந்த குப்பைகள்; மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ளுமா? appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Dinakaran ,
× RELATED ஆசிரியை படுகொலை கண்டித்து...