×

கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவொற்றியூர்: கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும், என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் தாம்பரம் சந்திப்பு மற்றும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் கடற்கரை – எழும்பூர் இடையே செல்லும்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே, ரூ.279 கோடி மதிப்பீட்டில் 4வது வழித்தடம் அமைக்கும் பணிக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி 4வது வழித்தடம் அமைக்கும் பணி தொடங்கியது. இதனால், சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில், சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையில் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

7 மாதங்களுக்கு, அதாவது 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்த தற்காலிக ரத்து நடைமுறையில் இருக்கும், என தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையில் மட்டுமே பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதனால், வேளச்சேரி மார்க்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்பவர்கள், சென்னை சென்ட்ரலில் இருந்து வேளச்சேரி மார்க்கமாக செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு பறக்கும் ரயில் சேவை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. தற்போது இருமார்க்கமாகவும் 90 ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் வெகுநாட்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கியதால் பயணிகள் உற்சாகம் அடைந்தனர். அதேநேரம், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை, மீண்டும் தொடங்கிய நிலையிலும், பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில்கள் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்தது.

அதாவது வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரும் ரயில்களும், கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் ரயில்களும் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், கோட்டை ரயில் நிலையம் சென்று மாறி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் முடிந்ததால் இன்று (நேற்று) முதல் பறக்கும் ரயில்கள் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனவும், பயணிகள் இனி பூங்கா நகர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Park Nagar Railway Station ,Beach – Velachery ,Railway ,Tiruvottiyur ,Southern Railway ,Coastal – Velachery ,Chennai Beach ,Egmore ,Coast – Velachery ,Dinakaran ,
× RELATED டெண்டர் விடப்பட்டு 4 ஆண்டுகளாகியும்...