சென்னை: கருப்பையில் நார்த்திசு கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரத்த ஓட்டத்தை தடை செய்து, அந்த கட்டியை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக குணப்படுத்தி உள்ளது. 48 வயதான பெண்ணிற்கு ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியும் 20 நாட்கள் வரை நீடிக்கிற பிரச்னை இருந்தது. ஹீமோகுளோபின் அளவு வெறும் 5 கிராம் என்ற அளவில் இருந்ததால் அதிக களைப்பாலும் கணிசமான அசவுகரியத்தாலும் சிரமப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற இந்த பெண்ணுக்கு கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் யுட்டரைன் ஃபைப்ராய்டு எம்போலைசேஷன் என அழைக்கப்படும் மருத்துவச் செயல்முறை மேற்கொள்ள முடிவு செய்தனர். பிறகு டாக்டர் சத்ய நாராயணன் தலைமையிலான மருத்துவ குழு வெற்றிகரமாக செய்து முடித்தனர். இச்செயல்முறை நிறைவடைந்து மூன்று மாதங்களுக்கு பிறகு அந்த பெண்ணின் மாதவிடாய் சுழற்சிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
இது தொடர்பாக டாக்டர் சத்ய நாராயணன் கூறியதாவது: யுட்டரைன் ஃபைப்ராய்டு எம்போலைசேஷன் சிகிச்சை செயல்முறையில் கர்ப்பப்பையில் உள்ள நார்த்திசு கட்டிகள் சுருக்குவதற்காக, அவைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை நிறுத்த ஆஞ்சியோகிராபிக் அணுகுமுறை மேற்கொள்ளப்படுகிறது. நார்த்திசு கட்டிகளுக்கு ஆக்சிஜனையும், ஊட்டச்சத்துகளையும் வழங்குகிற கர்ப்பப்பையின் தமனிகளை அடைத்து விடுவதன் மூலம் அவைகளின் அளவு படிப்படியாக குறைந்து விடும். மருத்துவச் செயல்முறைக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட எம்ஆர்ஐ சோதனையில் பல்வேறு அளவுகளில் பல நார்த்திசு கட்டிகளுடன் வீங்கிய கர்ப்பப்பை இருப்பதை காட்டின.
இதை தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து வழங்கப்பட்டு வெற்றிகரமாக இந்த செயல்முறை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அடுத்த நாள் இயல்பு நிலைக்கு திரும்பிய அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்செயல்முறை நிறைவடைந்து மூன்று மாதங்களுக்கு பிறகு அந்த பெண்ணின் மாதவிடாய் சுழற்சிகள் இயல்பு நிலைக்கு திரும்பின. ஹீமோகுளோபின் அளவுகளும், இதற்காக இரும்புச் சத்து துணைப்பொருட்களின் அவசியமின்றி முந்தைய அளவான 5 கிராமிலிருந்து 11 கிராம் என்ற அளவிற்கு கணிசமாக உயர்ந்திருக்கிறது.
The post கட்டிக்கு ரத்த ஓட்டத்தை தடை செய்து கருப்பையில் இருந்த நார்த்திசு கட்டி வெற்றிகரமாக அகற்றம்: காவேரி மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.