×

பவுஞ்சூர் அருகே மந்தகதியில் தரைப்பால பணி: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர்: பவுஞ்சூர் அருகே, தரைப்பாலம் அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெற்று வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகேயுள்ளது செங்காட்டூர் கிராமம். இங்கிருந்து வீரபோகம் கிராமம் செல்லும் சாலை சுமார் 3.5 கிமீ., தொலைவு கொண்டதாகும். இந்த சாலை இடையே செங்காட்டூர், பாக்குவாஞ்சேரி, மருதூர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.

இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையின் குறுக்கே வீரபோகம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக நீர்வரத்து செல்லும் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, தரைபாலத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து இருந்தது. இதனால், இப்பகுதியில் புதிய தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி, நபார்டு வங்கி நிதியின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் 30 மீட்டர் நீளம், 7.5 மீட்டர் அகலம் கொண்ட புதிய தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. பாலத்திற்கான அடித்தளம் அமைக்கும் பணி நடந்து வந்தநிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக கால்வாயில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், கட்டுமானப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் கால்வாயில் நீர்வரத்து குறைந்த நிலையில் பால கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தரைப்பால பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதால் இன்று வரையில் பாலம் அமைக்கும் பணி நிறைவு பெறாமல் உள்ளது. பணியாளர்களின் மெத்தனத்தால் அப்பகுதி வழியாக விவசாய வேலைக்கு செல்லும் விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பவுஞ்சூர் அருகே மந்தகதியில் தரைப்பால பணி: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mandakathi ,Pounjoor ,Seyyur ,Pounjur ,Mantakathi ,Sengatoor ,Chengalpattu district ,Veeraphogam ,Dinakaran ,
× RELATED சூனாம்பேட்டில் தாழ்வான பகுதிகளில்...