×

பெண்களே தற்காப்பு ஆயுதமாக மாறலாம்!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் தாங்கள் விரும்பி யதை செய்ய முழு சுதந்திரம் இருந்தாலும், அவர்களுக்கு சமூகத்தில் முழுமையான பாதுகாப்பு என்பது இல்லை என்ற நிலைதான் இன்றும் தொடர்ந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், பாலியல் பலாத்காரங்கள், கடத்தல்கள், நகை பறிப்பு சம்பவங்கள், சொந்த வீட்டிலேயே நடக்கும் வன்முறைகள் என பல்வேறு இன்னல்களுக்கு பெண்கள் ஆளாகின்றனர்.

பெண்கள் மட்டுமில்லாமல் சிறு குழந்தைகள், சிறுமிகள், வயதான பாட்டிகள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. தங்களைச் சுற்றி நடக்கின்ற இது போன்ற சம்பவங்களிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சில விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசி யமாக உள்ளது. அதில் ஒன்றுதான் தற்காப்புக்கலைகள். ‘‘பெண்களுக்கு ஆபத்து நேரிடும் சமயங்களில் அதிலிருந்து தங்களை சுயமாக பாதுகாத்துக்கொள்ள இந்த தற்காப்புக் கலைகள் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்’’ என்கிறார் ‘டிஃபென்ட் ஹேர்’ஸ் (DefendHer’s) ஸ்டூடியோவின் பயிற்சியாளர் தீபிகா.

“தற்காப்புக் கலைகளில் பல வகைகள் உண்டு. அதில் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் (Mixed Martial Arts, MMA) என்று அழைக்கப்படும் கலப்பு தற்காப்புக் கலைகள் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குத்துச்சண்டை, ஜுடோ, கராத்தே, ஜுஜுட்சு, தாய் குத்துச்சண்டை போன்ற கலைகளிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு நுட்பங்களை உள்ளடக்கியதாக இருக்கக்கூடியதுதான் இந்த கலப்பு தற்காப்புக் கலை. இவைகளை கற்றுக் கொள்வதால், பெண்களுக்கு கூடுதல் வலிமையும், தன்னம்பிக்கையும் கிடைக்கும். பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தால் கலப்பு தற்காப்புக் கலையை தான் நான் பரிந்துரை செய்வேன்.

இதனை பயில்வதால், அவர்களுக்கு தன்னம்பிக்கை கிடைப்பதோடு, உடல் மொழியிலும் சில மாற்றங்கள் ஏற்படும். ஒழுக்கம், நேரம் தவறாமை போன்ற நற்செயல்கள் நமது பழக்கங்களாக மாறும். ஒரு விஷயத்தை நாம் பார்க்கும் கண்ணோட்டம் மாறும். தற்காப்புக் கலைகளை கற்றுக்கொண்ட பின் எதையும் எதிர்கொள்ள முடியும் என்ற தைரியம் மேலோங்கி இருக்கும். எல்லா வயது பெண்களும் இந்த கலைகளை கற்றுக்கொள்ளலாம். இதற்கு வயது ஒரு தடையில்லை.” என்றவர் தற்காப்புக் கலைகளின் பலன்களை பகிர்கிறார்.

‘‘கராத்தே என்பது குத்துதல், உதைத்தல், முழங்கை மற்றும் முழங்கால் தாக்குதல்களை மேற்கொள்ளும் ஒரு கலையாகும். எதிரியை நிலத்தில் வீழ்த்தி நழுவ விடாமல் பிடித்து வைப்பது ஜுடோ கலை. டைக்குவாண்டோ என்பது கை, கால்கள் மூலம் உதைத்து எதிரியை தாக்குவது. கை முட்டிகளால் மட்டும் தாக்குவது குத்துச்சண்டை. இவையெல்லாம் கலந்ததுதான் கலப்பு தற்காப்புக் கலை. இந்தக் கலை எல்லோருக்குமானது என்றாலும், பெண்கள் இந்தக் கலைகளை கற்றுக் கொள்வதால், அவர்கள் தங்களை மட்டுமின்றி அவர்களை சுற்றி இருப்பவர்களையும் தற்காத்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். அந்தக் கலையை முறையாக பயிலும் போது, கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

வேலை காரணமாக வெளியே செல்லும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இது போன்ற தற்காப்புக் கலைகள் கற்று வைத்திருந்தால், மிகவும் உதவியாக இருக்கும். இந்தக் கலைகளை கற்றுக்கொள்வதற்கு நிறைய பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வகையான கலைக்கும் பல்வேறு நுணுக்கங்களையும் படிநிலைகலையும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். உதாரணமாக யாரோ ஒருவர் உங்கள் கையை பிடித்து இழுக்கிறார்கள் என்றால் அந்தப் பிடியிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள உங்களுக்கு சில நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான பயிற்சியும் முறையாக எடுத்திருந்தால்தான் ஆபத்து ஏற்படும் சமயங்களில் எளிதாக உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள முடியும்” என்றவர் பெண்களுக்கான சண்டைப் பயிற்சி மையத்தை தொடங்கியதை பற்றியும் பகிர்கிறார்.

“எனக்கு 7 வயதாக இருக்கும் போதிலிருந்தே நான் தற்காப்புக் கலைகளை கற்று வருகிறேன். சிறுவயதிலிருந்தே ஜாக்கி சான், ப்ரூஸ்லி போன்றோர் நடித்த திரைப்படங்களைதான் அதிகமாக பார்ப்பேன். சண்டைக்காட்சிகள் உள்ளடங்கிய திரைப்படங்கள் எனக்கு பிடிக்கும். அப்போதிலிருந்தே சண்டைப் பயிற்சிகள், தற்காப்புக் கலைகள் மீது அதிக ஆர்வமுடன் இருந்தேன். இப்போது வரையிலும் அவற்றின் மீதான எனது ஆர்வம் குறையவில்லை. நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றிருக்கேன். இப்போது மாநில அளவிலான குத்துச்சண்டை, ஜூடோ, தேசிய அளவிலான கராத்தே, டைக்குவாண்டோவில் தங்கப்பதக்கம் வென்றிருக்கேன்.

சிறுவர்களுக்கென்று நிறைய தற்காப்பு கலை பயிற்சி மையங்கள் உள்ளன. ஆனால் பெண்களுக்கென்று தற்காப்புக் கலை மற்றும் சண்டைப்பயிற்சி மையங்கள் பெரிய அளவில் இல்லை. எனவேதான் நான் பெண்களுக்கென்று ஒரு சண்டைப் பயிற்சி மையத்தை அமைத்திருக்கிறேன். ஒவ்வொரு பெண்களும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், நான் பயின்ற கலைகளை மற்ற பெண்களும் கற்றுக்கொண்டு பயன்பெறும் நோக்கிலும் இந்த மையத்தினை தொடங்கினேன்.

இங்கு பெரும்பாலும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறேன். எனது மையத்தில் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இங்கு தற்காப்புக் கலைகள் மட்டுமின்றி போட்டிகளுக்கான சண்டைப் பயிற்சிகளையும் கொடுத்து வருகிறேன். பாதுகாப்பிற்காக தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள வரும்போது சில வழிமுறைகளையும், போட்டிகளில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள் வரும்போது வேறு சில வழிமுறைகளையும் நுணுக்கங்களையும் பயிற்றுவிப்பேன். மாணவர்களின் ஆர்வத்தை பொறுத்தே பயிற்சிகளும் அமையும்.

இதுமட்டுமில்லாமல் சில கார்ப்பரேட் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் தற்காப்புக் கலைகளை பயிற்சி பட்டறைகளாக நடத்தி வருகிறேன். அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு 30 நிமிடங்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன். இந்தப் பயிற்சி சில வாரங்களுக்கு ஒவ்வொரு அமர்வுகளாக நடக்கும். அதில் ஒவ்வொரு கலைக்கான பயிற்சி படிநிலைகளை பயிற்றுவிக்கிறேன். தனிப்பட்ட முறையில் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள இயலாத பெண்கள், அலுவலகங்களில் நடைபெறும் இந்தப் பயிற்சி பட்டறைகள் மூலம் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ளலாம். பெண்கள் அதிகமாக பணியாற்றும் நிறுவனங்கள் இது போன்ற முன்னெடுப்புகளை எடுத்தால் பெண்களின் பாதுகாப்பிற்கு உதவியாக இருக்கும்.

பெண்கள் வெளியில் வர வேண்டும். ஆபத்துகளுக்கு பயந்து கொண்டு அப்படியே இருந்துவிடக்கூடாது. கலப்பு தற்காப்புக் கலைகளை கற்றுக்கொண்டால் எந்த நேரத்தில் என்ன ஆபத்து நேர்ந்தாலும் அவற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம். யாரேனும் வந்தால்தான் என்னை காப்பாற்ற முடியும் என்கிற நிலையில் மாட்டிக்கொள்ள தேவையில்லை. பெண்கள் தங்களையே தற்காப்பு ஆயுதமாக ஆக்கிக் கொள்ளலாம்” என்கிறார் தீபிகா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post பெண்களே தற்காப்பு ஆயுதமாக மாறலாம்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED பெண்களின் செல்ஃப் கேர் ‘0’வாக உள்ளது!