×

₹7.03 கோடி ஒதுக்கப்பட்டும் காரைக்குடி ரயில் நிலையத்தில் மந்தமான கட்டிட பணி

*விரைந்து முடிக்க வலியுறுத்தல்

*கூடுதல் ரயில் இயக்க வேண்டும்

காரைக்குடி : காரைக்குடி ரயில்வே ஸ்டேசனுக்கு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 3 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நடந்து வரும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால், பயணிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கூடுதல் ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரைக்குடி பகுதியில் பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி, மத்திய மின் வேதியியல் ஆய்வகம் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து சென்னைக்கு தினசரி ரயில் மற்றும் வராந்திர ரயில்கள் இயக்கப்படுகிறது. தவிர திருச்சி, மானாமதுரை, விருதுநகர், திருத்துறைப்பூண்டி பகுதிக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தை பொறுத்தவரை பயணிகள் வருகை மற்றும் பயணிகள் அதிகளவில் செல்வதை வைத்து பி கிரேடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 8 கோடியே 36 லட்சத்து 816 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும், பயணிகள் தேவைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என தொழில் வணிக்கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் எழுப்பப்பட்ட தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 3 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பயணிகள் நடைமேம்பாலத்தில் லிப்ட் அமைக்க 86 லட்சத்திற்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மிகப்பெரிய கொடி கம்பம், இரண்டு புறமும் ஆர்ச், ஆர்ச் வரை பெரிய போர்டிகோ, கார் மற்றும் டூவீலர் ஸ்டாட்ண்ட் ஆகிய பணிகள் முடிந்துள்ளது. மேலும் ரயில் நிலையத்தின் உள்ளே நுழையும் பகுதியில் நீண்ட நாட்களாக கற்கள் பரப்பி கிடப்பதால் பயணிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

பயணிகளின் வசதிக்காக பிளாட்பார்ம்களை இணைக்கும் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடைமேடை பாலம், சிசிடிவி கேமரா, புதிய பிளாட்பார்ம் மேற்கூரைகள், பயணிகள் தங்க வசதியாக விடுதி மற்றும் ஏ.சி ஓய்வறை பணிகள் இதுவரை முடிக்கப்படாமல் உள்ளது.இப்பணிகள் கடந்த மார்ச் மாதம் முடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 மாதங்களுக்கு மேல் ஆகியும் முழுமை பெறாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகிறது. பயணிகள் நடைமேம்பாலத்தில் லிப்ட் பணி முடிந்தும், அவ்வப்போது தான் செயல்படுகிறது. கட்டுமானங்களுக்கு இடையே பயணிகள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தொழில்வணிகக் கழகத் தலைவர் சாமிதிராவிடமணி கூறுகையில், ‘‘காரைக்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என 2015ம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்ட தொடர் கோரிக்கை மனுக்கள் மற்றும் பயணிகள் வருகை மற்றும் வருமானத்தை வைத்து அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.7.03 கோடி ஒதுக்கி உள்ளனர். நிலையத்தின் முன்பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். முதல் பிளாட்பாரம் வடக்குபக்கம் பகுதியில் முழுமையான மேற்கூரை இடைவெளி இல்லாமல் அமைக்க வேண்டும். மற்ற பிளாட்பாரத்திலும் மேற்கூரை முழுமையாக அமைக்க வேண்டும்.

நிலையத்தின் நுழைவு பகுதி மற்றும் டூவீலர் ஸ்டாண்டில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். புதிய நடைமேம்பாலம், நகரும் படிக்கட்டு பணியை துவங்க வேண்டும். வடக்கு பகுதியில் 1ஏ நடைமேடை, பிட்லைன் புதிய பாதை அமைக்க வேண்டும். கிழக்கு பகுதியில் 6ம் நம்பர் புதிய பாதை அமைக்க வேண்டும்.

காரைக்காலில் இருந்து நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். பாலக்காடு திருச்சி தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலை காரைக்குடி அல்லது ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். திருச்சி விருதுநகர் தினசரி ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்’’ என்றார்.

காரைக்குடி பயணிகள் கூறுகையில்,‘‘காரைக்குடி பொதுமக்கள் ரயிலை நம்பியே பல பயணங்களை தொடர்கின்றனர். வடமாநிலங்களுக்கு செல்லும் செல்வோர் சில நேரங்களில் போதிய ரயில்கள் இல்லாமல் அவதிப்படும் நிலை உள்ளது. பொதுவாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விஷேச தினங்கள் மற்றும் தொடர் அரசு விடுமுறையின் போது போதிய ரயில்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். பஸ்களில் பயணம் செய்வதற்கும் கடும் சிரமப்படும் நிலை உள்ளது.

எனவே காரைக்குடியை மையப்படுத்தி கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும். ஏற்கனவே காரைக்குடி ரயில் நிலையம் மூலம், தெற்கு ரயில்வேக்கு அதிகளவு வருமானம் கிடைக்கிறது. அப்படி இருக்க பயணிகள் நலன் கருதி இன்றும் கூடுதல் ரயில்கள் விட வேண்டும். இங்கிருந்து வர்த்தகர்கள் வடமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர்.

தொழிலாளர்களும் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். அவர்களின் நலன் கருதி ரிசர்வேசன் இல்லாத பெட்டிகளை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காரைக்குடியை மையமாக வைத்து பல ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும்’’ என்றனர்.

The post ₹7.03 கோடி ஒதுக்கப்பட்டும் காரைக்குடி ரயில் நிலையத்தில் மந்தமான கட்டிட பணி appeared first on Dinakaran.

Tags : Karaikudi railway station ,Karaikudi ,Karaikudi Railway ,Station ,Amrit Bharat ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாதது ஏன்? : நீதிபதி