×

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

விருதுநகர், நவ. 10: திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சாலைகள், பாலங்கள் மற்றும் கட்டடப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் உடையனம்பட்டியில், ரூ.7.32 கோடி மதிப்பில் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.30 கோடி மதிப்பில் கட்டட பணிகள், அருப்புக்கோட்டையில் ரூ.119 கோடி மதிப்பில் புறவழிச்சாலை, இ.குமாரலிங்கபுரம் சிப்காட்டில் ரூ.26 கோடி மதிப்பில் சாலைப் பணிகள், சிவகாசியில் ரூ.120 கோடி மதிப்பில் புறவழிச்சாலை பணிகள், ராஜபாளையத்தில் ரூ.30 கோடி மதிப்பில் இணைப்பு சாலை, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டட பணிகள் என நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டடங்கள் தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிப்பதற்கும் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.

பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் ஆணையின்படி, விருதுநகர் மாவட்டத்திற்கு சாலைப்பணிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 2033 கிலோமீட்டர் சாலைகள் நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 247 கிலோமீட்டர் தூர சாலை ரூ.261 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் பணிகள் நடைபெற்று இருக்கின்றது.

2024- 2025 ஆம் நிதியாண்டில் 68 கிலோமீட்டர் சாலைகள் மற்றும் தரைமட்ட பாலம் அமைக்க ரூ.201 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 121 கிலோமீட்டர் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டு ரூ.117 கோடி மதிப்பீட்டில் மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தப்படவுள்ளது.இருக்கன்குடி கோயிலில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, நடைபாதையும், சாலைகளும் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டற்கிணங்க, ரூ.30 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், வில்லிபுத்தூரில் அமைந்துள்ள திருவண்ணாமலை கோவிலின் கிரிவலப்பாதையை மேம்படுத்துவதற்காக 2.50 கி.மீ மேம்படுத்தும் பணி ரூ.5 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ரயில்வே பாலங்களை பொருத்தவரையில், இராஜபாளையத்தில் ரூ.46 கோடி ரயில்வே பாலம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. சிவகாசி சாட்சியாபுரத்தில் ரூ.62 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.சிவகாசி- திருத்தங்கல் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான சுமார் ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நில எடுப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணிகள் முடிவடையும் பட்சத்தில் துறையின் சார்பாக சுமார் ரூ.50 ஒதுக்கீடு செய்யப்படுகிற நிலைகள் இருக்கிறது.சாத்தூர்- நள்ளிக்கு இடையில் ரயில்வே பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், ரூ.37 இலட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை நகருக்கு புறவழிச்சாலை ரூ.119 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ராஜபாளையத்தில் 2 கிலோ மீட்டர் இணைப்பு சாலை அமைப்பதற்கு ரூ.30 கோடி மதிப்பில் விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது. சிவகாசி புறவழிச்சாலை மூன்று கட்டமாக செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு ஏறத்தாழ 34 கிலோமீட்டர் சாலையில், முதல் கட்டமாக 9.92 கிலோமீட்டர் எடுக்கப்பட்டு, ரூ.120 கோடி மதிப்பிலான அரசாணை வெளியிடப்பட்ட பின், நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, பணிகள் துவங்கப்படும்.அருப்புக்கோட்டையில் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையாக ரூ.30 கோடி மதிப்பில், தரைத்தளமும், 6 தளங்களும் கொண்ட மருத்துவமனையாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டிற்குள் கட்டு முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ராஜபாளையம் மருத்துவமனை ரூ.40 கோடி மதிப்பில் செய்யப்பட்டு தரைத்தளத்துடன் கூடிய நான்கு தளங்கள் உள்ளடக்கிய மருத்துவமனை கட்டடப்பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது போன்று எண்ணற்ற மக்கள் பயன்படுத்தக்கூடிய இந்த காரியமாக இருந்தாலும் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

The post விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,A.V.Velu ,Virudhunagar district ,Virudhunagar ,AV Velu ,Tiruchuzhi ,Aruppukkottai ,Sivakasi ,Rajapalayam ,Thiruchuzhi Panchayat Union ,Vodeenampatti ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே...