×

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா துவக்கம்: 700 கலைஞர்களின் பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சி

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா நேற்று காலை தொடங்கியது. 700 கலைஞர்கள் பங்குபெறும் பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன், உலக புகழ் பெற்ற பெரிய கோயிலை கட்டினார். இவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஐப்பசி மாத சதய நட்சத்திரம் நாளில் 1039வது சதய விழா 2 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

நேற்று காலை 8.30 மணியளவில் மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் சதயவிழா கோலாகலமாக துவங்கியது. கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தொடக்க உரை ஆற்றினார். தொடர்ந்து பழநி ஆதீனம் குரு மகா சன்னிதானம் சீர் வளர்சீர் சாது சண்முக அடிகளார் அருளுரை வழங்கினார். விழாவையொட்டி பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வரலாறாக வாழும் மாமன்னன் ராஜராஜன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாலை, பழங்கால இசைக்கருவிகளோடு 700 நாட்டிய கலைஞர்களின் மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

அதனைத் தொடர்ந்து பன்முக ராஜராஜனை பாடுவோம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. இரவு 8 மணி அளவில் மாமன்னன் ராஜராஜ சோழனின் நிலைத்த பெரும் புகழுக்கு காரணம் அவரது நிர்வாகப் பணியா? கலைப் பணியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இரவு 9.30 மணியளவில் நவீன தொழில்நுட்பத்தில் சதய நாயகன் ராஜராஜன் என்ற வரலாற்று நாடகம் நடந்தது. இரண்டாம் நாளான இன்று கோயில் பணியாளர்களுக்கு ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் புத்தாடை வழங்குகிறார்.

பின்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு கட்சி, அமைப்பு, இயக்கம் சார்பில் மாலை அணிவிக்கின்றனர். காலை 8 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஓதுவா மூர்த்திகள் திருமுறை பண்ணுடன் ராஜ வீதிகளில் திருஉலா நடைபெறும். அதன் பின்னர் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பிற்பகலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற உள்ளது. மாலை 5.30 மணிக்கு ‘உலகம் வியக்கும் மாமன்னன் ராஜராசன்’ என்ற தலைப்பில் சிறப்பு நாட்டியம் நடைபெறும். இரவு 7 மணிக்கு ராஜராஜன் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.

The post தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா துவக்கம்: 700 கலைஞர்களின் பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Rajaraja ,Chola ,1039th Sadaya Festival ,Thanjavur Periya Temple ,Tanjore ,sadaya ,Mamannan ,Tanjore Periya Koil ,Rajaraja Cholan ,Cholan ,Tanjore Big Temple ,
× RELATED 1,600 கஞ்சா செடிகளை வளர்த்த 2 பேர் கைது