×
Saravana Stores

நான் உயிரோடு இருக்கும் வரை 370 சட்டப்பிரிவு மீண்டும் வராது: மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

மும்பை: மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பாஜ கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ‘நான் உயிரோடு இருக்கும் வரை ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் அமல்படுத்த முடியாது’ என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடத்தப்பட உள்ளன. இந்த தேர்தலில் பாஜ தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

பாஜ கூட்டணியை தோற்கடித்து, மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டுமென்ற முனைப்புடன் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், உத்தவ் சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரபவார்) கட்சிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன. கடந்த இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மகாராஷ்டிராவுக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டார். அதே வேளையில் ஆளும் மகாயுதி கூட்டணி கட்சிகளான பாஜ, ஷிண்டே சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அனல்பறக்க பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

ஆளுங்கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜ மூத்த தலைவர்களான ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் மகாராஷ்டிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கினார். நேற்று துலே பகுதியில் ஆளுங்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நாட்டில் பரபரப்பாக பேசப்படும் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீட்டெடுக்கும் தீர்மானத்தை பற்றி பேசினார்.

இந்திய அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு, சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்தது. அதுமட்டுமின்றி ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையடுத்து கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்றார்.

6 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த திங்கட்கிழமை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கூடியது. கடந்த புதன்கிழமை 3ம் நாள் கூட்டத்தொடரில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ மீட்டெடுப்பது குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. துணை முதல்வர் சவுத்ரி இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு பாஜ எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானத்தின் நகலை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்ந்து நேற்று வரை காஷ்மீர் சட்டப்பேரவையில் பாஜவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் துலேவில் நேற்று நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நான் உயிரோடு இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவை மீட்டெடுக்க முடியாது. டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் மட்டுமே ஜம்மு காஷ்மீரில் பின்பற்றப்படும்.

370வது சட்டப்பிரிவை மீட்டெடுப்பது பற்றி ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எப்படி தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பதையும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜ எம்எல்ஏக்கள் தூக்கி எறியப்பட்டதையும் நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள். நான் உயிரோடு இருக்கும் வரை அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது. கொண்டு வர விடமாட்டேன். இதை நம் நாட்டு மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். சாதிகளையும், சமூகங்களையும் பிளவுபடுத்தும் ஆபத்தான விளையாட்டை காங்கிரஸ் ஆடுகிறது.

ஒரு சாதியை இன்னொரு சாதியினருக்கு எதிராக நிறுத்தவும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களை தூண்டிவிட்டு அவர்களை பலவீனப்படுத்தவும் காங்கிரஸ் விரும்புகிறது. நேரு காலத்தில் இருந்தே காங்கிரசும் அவரது குடும்பத்தினரும் இடஒதுக்கீட்டை எதிர்த்தனர். இப்போது அவர்களது நான்காம் தலைமுறையான இளவரசர் (ராகுல்காந்தியை மறைமுகமாக குறிப்பிட்டு) சாதிகளிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் என்பதை நீங்கள் உணர வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் காங்கிரசின் அரசியல் முடிந்துவிடும்.

முன்பு மத அரசியலில் ஈடுபட்டு நாட்டின் பிரிவினைவாதத்துக்கு வழிவகுத்த காங்கிரஸ், இப்போது சாதி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. நாட்டிற்கு எதிராக இதை விட பெரிய சதி வேறொன்றும் இருக்க முடியாது. மகாராஷ்டிராவில் உள்ள எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி, சக்கரங்கள் மற்றும் பிரேக் இல்லாத வாகனம் போன்றது. அங்கு டிரைவர் சீட்டில் உட்காரப் போவது யார் என்ற மோதல் நடக்கிறது.

பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணியால் மட்டுமே மகாராஷ்டிராவின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார். இதுபோல், சாங்கிலியில் பிரசாரத்தில் பேசிய அமித்ஷா, ‘‘சத்ரபதி சிவாஜி மகாராஜ் இருந்த மாநிலத்தில் இருந்து ராகுலுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். உங்களால் அல்லது உங்கள் தலைமுறைகளால் கூட 370 வது சட்டப் பிரிவை மீட்டெடுக்க முடியாது’’ என்றார்.

* ராகுல் காந்திக்கு மோடி சவால்
துலேவை தொடர்ந்து நாசிக்கில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, முடிந்தால் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை 15 நிமிடம் சாவர்க்கரை பற்றியும் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவை பற்றியும் புகழ்ந்து பேச வையுங்கள் என சவால் விடுத்தார். பிரதமர் மோடி கூறுகையில், ‘ மராத்தா கலாச்சாரம் என்பது எங்களின் நம்பிக்கையின் ஆதாரம். ஆனால் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் மராத்திக்கு உரிய மரியாதை வழங்கவில்லை. சாவர்க்கரை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசிவருகிறார்கள்.

இங்கு தேர்தல் நடைபெறுவதால் சாவர்க்கரை அவமரியாதையுடன் பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும். சாவர்க்கரை மகானாக கருதுபவர்கள்(உத்தவ் சிவசேனாவை குறிப்பிட்டு) இப்போது காங்கிரசுடன் இருக்கிறார்கள். மகா விகாஸ் அகாடி தலைவர்கள் முடிந்தால், ராகுல் காந்தியை 15 நிமிடங்கள் சாவர்க்கரை பற்றியும் அவர் செய்த தியாகங்களை பற்றியும் பேச வைக்க வேண்டும். பாலசாகேப் தாக்கரேவை பற்றியும் புகழ்ந்து பேச வேண்டும் என சவால் விடுக்கிறேன். அவர்களின் பதிலுக்காக காத்திருப்பேன்’ என்று சவால் விடுத்தார்.

The post நான் உயிரோடு இருக்கும் வரை 370 சட்டப்பிரிவு மீண்டும் வராது: மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,Maharashtra ,MUMBAI ,BAJA ALLIANCE ,JAMMU ,KASHMIR ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில்...