×

அகமலையில் மண்சரிவு ஏற்பட்ட சாலையில் சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

தேனி : தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகமலை பகுதியில மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடந்து வரும் சாலை சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டம், போடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகமலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கண்ணக்கரை, சொக்கனலை, அலங்காரம், பட்டூர், சூழ்ந்தகாடு, மருதையனூர், கானாமஞ்சி, அண்ணாநகர், வாழைமரத்தொழு, விக்கிரமன்தொழு, ஊரடி, ஊத்துக்காடு, பேச்சியம்மன்சோலை, கரும்பாறை, குறவன்குழி மற்றும் சுப்பிரமணியபுரம் போன்ற உட்கடை கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 4 ஆயிரம் பேர் உள்ளனர்.

இப்பகுதியில் விளையும் மலைத்தோட்டப்பயிர்களான மா, பலா, வாழை, எலுமிச்சை, காபி, மிளகு, பீன்ஸ், அவகோடா, நார்த்தங்காய், உருளைக்கிழங்கு மற்றும் இலவங்காய் போன்ற விளைபொருள்களை சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதற்கும், மருத்துவம் மற்றும் இதரத் தேவைகளுக்காக பெரியகுளம் செல்வதற்கும் அகமலை மலைச்சாலை பிரதான சாலையாக பயன்பட்டு வருகிறது. இச்சாலை செங்குத்தான மலைப்பகுதியில் உள்ளதால் இச்சாலையில் ஜீப்பு போக்குவரத்து மட்டுமே உள்ளது. இதர வாகன போக்குவரத்து இல்லை.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு அகமலை ஊராட்சி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சோத்துப்பாறையில் இருந்து அகமலை மலைச்சாலையில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தும், மண்சரிவுகள் ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை சீரமைக்கும் பணி கடந்த 4 நாட்களாக இரவு&பகலாக நடந்து வருகிறது.

இந்த மலைச்சாலையானது மிகவும் குறுகலான சாலையாக உள்ளதாலும், தொடர்ந்து இப்பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், மண் அள்ளும் இயந்திரம் மற்றும் சீரமைப்பு பணி மேற்கொள்ளும் வாகனங்களை மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சாலை சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டு மண்சரிவு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இப்பணிகளை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். அப்போது, மாநிலநெடுஞ்சாலைத் துறை தேனி கோட்ட பொறியாளர் சுவாமிநாதன், உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, உதவி பொறியாளர் சரவணன், சாலை ஆய்வாளர் சரவணன், தாசில்தார் மருதுபாண்டி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post அகமலையில் மண்சரிவு ஏற்பட்ட சாலையில் சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Agamalai ,Theni ,Agamala ,Bodi Panchayat Union of ,Theni district ,Panchayat ,Bodi Panchayat Union of Theni District ,Dinakaran ,
× RELATED எஸ்.பி.அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி