×
Saravana Stores

ஆந்திர அரசு குறித்து விமர்சனம்: அமித்ஷாவுடன் பவன்கல்யாண் சந்திப்பு

திருமலை: ஆந்திராவில் உள்துறை அமைச்சகம் குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் பவன்கல்யாண் குற்றம்சாட்டிய நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரபாபுநாயுடுவின் தலைமையில் பாஜக, ஜனசேனாவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன்கல்யாண் உள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவன் கல்யாண் பேசுகையில்,’’மாநிலத்தில் போலீசார் சரியாக வேலை செய்யவில்லை. கடந்த ஆட்சியை போலவே தற்போதும் மந்தமாக உள்ளனர். தவறு செய்த குற்றவாளிகளை ஜாதி, மதம், கட்சி என பாகுபாடு பார்க்கின்றனர். இதேநிலை நீடித்தால் உள்துறை அமைச்சராக நானே பொறுப்பேற்க வேண்டி வரும்’’ என்றார். இவரது பேச்சு ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் அனிதா அளித்த பேட்டியில், `துணை முதல்வரின் வார்த்தைகளை நாங்கள் ஊக்கமாக எடுத்துக்கொண்டு செயல்படுவோம். போலீசார் கடந்த ஆட்சியில் இருந்தது போன்றுதான் இருந்து வருகிறார்கள். இதுதொடர்பாக சீர்திருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார். இந்தநிலையில் பவன்கல்யாண் நேற்று டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேசினார்.

இந்த சந்திப்பின்போது ஆந்திராவில் கடந்த 100 நாட்கள் நடந்த தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான ஆட்சி நிர்வாகம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அமித்ஷா, மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளான சுமார் 60 சட்டமன்ற தொகுதிகளில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பவன்கல்யாணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை பவன்கல்யாண் ஏற்றுக்கொண்டாராம். எனவே அடுத்த சில நாட்களில் அவர் மகாராஷ்டிராவில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்று தெரிகிறது.

The post ஆந்திர அரசு குறித்து விமர்சனம்: அமித்ஷாவுடன் பவன்கல்யாண் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : AP government ,Bhavangalyan ,Amitshah ,Thirumalai ,Interior Minister ,Amitsha ,Delhi ,Deputy Chief Minister ,Bhavankalyan ,Andhra Pradesh ,Telugu Desam Party ,Chandrapapunayudu ,
× RELATED திருப்பதி லட்டு விவகாரம்- வழக்கு தள்ளுபடி