×

ஹெலன் கூட்டுக்குடிநீர் திட்டத்தை சீரமைத்து கூடலூர் நகராட்சி பகுதி பொது மக்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்க கோரிக்கை

கூடலூர் : ஹெலன் கூட்டுக்குடிநீர் திட்டத்தை சீரமைத்து கூடலூர் நகராட்சி பகுதி பொது மக்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 1989-90 ம் ஆண்டுகளில் ஹெலன் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போதைய கூடலூர் பேரூராட்சியின் தலைவராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கமலாட்சன் திட்டத்திற்கு வித்திட்டார்.

அப்போது மக்கள் தொகையான சுமார் 30 ஆயிரம் பேர் கொண்ட கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்தூர் பகுதியில் தடுப்பணை அமைத்து, அங்கிருந்து 9 இன்ச் உள்ளளவு கொண்ட இரும்பு குழாய் மூலம் காந்தி நகர் பகுதியில் அமைக்கப்பட்ட நூறு அடி நீளம் 25 அடி அகலம் 20 அடி உயரம் உள்ள சுத்திகரிப்பு தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

அங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீர் காந்தி நகர் பெரிய சூண்டி, அண்ணா நகர், பாலவாடி, காமராஜர் நகர் வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை ஓரத்தில் பதிக்கப்பட்ட 9 இன்ச் உள்ளவு கொண்ட குழாய்கள் மூலம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஹெல்த் கேம்ப் பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் சேமிப்பு தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. அங்கிருந்து குழாய்கள் மூலமாகவும் வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட சிறிய நீர் தேக்க தொட்டிகள் மூலமாகவும் நகர் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இதன் மூலம் கூடலூரின் பெரும்பாலான பகுதிகளில் இருந்த குடிதண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்மாடி பகுதியில் அமைக்கப்பட்ட சிறிய தடுப்பணையில் இருந்து குழாய்கள் மூலம் மேல் கூடலூர் கோக்கால் பகுதியில் அமைக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மேல் கூடலூர், நடு கூடலூர் கோத்தார் வயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் ஆங்காங்கே அமைக்கப்பட்ட நகராட்சி பொதுக்கிணறுகள் மூலம் பம்ப்செட் அமைத்தும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது கூடலூர் நகராட்சியின் மக்கள் தொகை 54 ஆயிரம் பேர்கள். சுமார் 30 ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஹெலன் மற்றும் பல்மாடி குடிநீர் திட்டங்களில் இருந்து வரும் தண்ணீர் அனைத்து மக்களுக்கும் விநியோகம் செய்ய போதுமானதாக இல்லாததால் கூடலூர் கள்ளிக்கோட்டை சாலை இரும்பு பாலம் பகுதியில் ஆற்றில் சிறிய தடுப்பணை அமைத்து அங்கிருந்து மோட்டார்கள் மூலம் பம்ப் செய்து சுத்திகரித்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஹெலன் மற்றும் பல்மாடி திட்டங்களில் கிடைக்கும் தண்ணீர் எந்த வித செலவும் இன்றி மேடான பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் உள்ள கூடலூர் பகுதிக்கு குழாய்கள் மூலம் கொண்டு வந்து சேர்க்கப்படுகிறது. ஆனால் கோழிப்பாலம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வருடத்திற்கு சுமார் 3 லட்சம் ரூபாய் வரை மின்சார உபயோகத்திற்கு செலவாகிறது. மேலும் அடிக்கடி மோட்டார்கள் பழுதடைவதால் பராமரிப்பு செலவுகளும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தொரப்பள்ளி பகுதியில் ஓடும் ஆற்றில் இருந்து மோட்டார்கள் மூலம் தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு கூடலூர் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கும் வகையில் சுமார் 1 கோடி ரூபாயில் புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹெலன் மற்றும் பல்மாடி குடிநீர் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தாமல் புதிய திட்டங்கள் மூலம் நகராட்சிக்கு செலவினங்கள் அதிகரித்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து இந்த திட்டத்தை நேற்று கூடலூர் நகராட்சி கவுன்சிலர்கள் வெண்ணிலா சேகர், உஸ்மான், சத்தியசீலன், சக்கிலா, லீலா வாசு உள்ளிட்டோர் குழாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் பணியாளர்களுடன் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து நகர் மன்ற உறுப்பினர் வெண்ணிலா சேகர் கூறியதாவது: ஹெலன் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணையை முறையாக பராமரித்து இதன்மூலம் கிடைக்கும் தண்ணீரை முழுமையாக பயன்படுத்தினால் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை 24 மணி நேரமும் குடிநீர் வழங்க முடியும். இங்கு வீணாகும் உபரி நீரை தேக்கி வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் பெரிய அளவிலான செலவுகள் இன்றி தண்ணீர் விநியோகம் மேற்கொள்ள முடியும்.

புதிய குடிநீர் திட்டங்களுக்கு செலவிடப்படும் தொகை அவற்றின் பராமரிப்பு செலவுகள் உள்ளிட்டவற்றை கணக்கில் எடுக்கும் போது ஹெலன் குடிநீர் திட்டத்தை பராமரிப்பதற்கு பெரிய அளவில் செலவுகள் எதுவும் ஏற்படாது. தற்போது ஒரு சில இடங்களில் 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கோடை காலத்தில் தண்ணீர் விநியோகம் செய்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனை ஒவ்வொரு மன்ற கூட்டத்திலும் வலியுறுத்தி வந்துள்ளேன்.

ஹெலன் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணை முறையாக பராமரிக்கப்படாததால் தண்ணீர் கசிந்து வீணாகிறது. சுத்திகரிப்பு தொட்டியில் உள்ள ஓட்டைகள் மூலமாகவும் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் தடுப்பணையில் இருந்து சுத்திகரிப்பு தொட்டிக்கு வரும் ஒன்பது இன்ச் விட்டமுள்ள இரும்பு குழாய் பழுதடைந்து அது மூடப்பட்டு தனியாக 4 இன்ச் பிளாஸ்டிக் குழாய் மூலம் சுத்திகரிப்பு தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இதே போல் அருகில் உள்ள குயின்ட் பகுதியில் இருந்தும் 4 இன்ச் குழாய் மூலம் சுத்திகரிப்பு தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் தண்ணீரும் முழுமையாக கூடலூருக்கு வந்து சேர்வதில்லை. 50 சதவீத தண்ணீர் மட்டுமே இதில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் கசிந்து வெளியேறுவதை தடுப்பதோடு, வருடம் ஒரு முறை தடுப்பணையில் உள்ள சேற்றினை தூர் வாரி அகற்ற வேண்டும்.

காந்திநகர் பகுதியில் 100 அடி நீளம் 25 அடி அகலம் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு தொட்டியை சீரமைத்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க வேண்டும். இதன்மூலம் ஹெலன் திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அவ்வாறு திட்டத்தை முழுமையாக பயன்படுத்தும்போது கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு ஒரு முறை 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க முடியும். இது குறித்து தமிழக முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். கூடலூர் நகராட்சி நிர்வாகமும் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நகர் மன்ற உறுப்பினர் வெண்ணிலா சேகர் கூறினார்.

The post ஹெலன் கூட்டுக்குடிநீர் திட்டத்தை சீரமைத்து கூடலூர் நகராட்சி பகுதி பொது மக்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Helen ,Gudalur Municipal ,Kudalur ,Kudalur Municipal ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டா. மாணவியிடம் பாலியல் சீண்டல்: போக்சோவில் வாலிபர் கைது