×
Saravana Stores

கோயில் பூசாரி தற்கொலை விவகாரம்; ஓபிஎஸ் தம்பி மீதான வழக்கில் நவ.13ல் தீர்ப்பு: திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கல்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் நாகமுத்து (22). கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயில் பூசாரி. கோயிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக இவருக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் நாகமுத்து தாக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 2012, டிச.7ம் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோயில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர சபை தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுப்படி கடந்த 2015 டிசம்பர் முதல் இந்த வழக்கு, திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே பாண்டி இறந்துவிட்டார். மீதமுள்ள 6 பேர் மீதான வழக்கு விசாரணை, தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவகுமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 4 (தடயங்கள்) சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் 3 பேர் மட்டும் நீதிபதி முரளிதரன் முன்பு நேரில் ஆஜராகினர். ஓ.ராஜா உள்பட 3 பேர்ஆஜராகவில்லை. அரசு தரப்பில் இறுதிக்கட்ட விசாரணை முடிந்தது. இதனையடுத்து நீதிபதி, வழக்கின் தீர்ப்பை நவ.13ம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா உட்பட 6 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

The post கோயில் பூசாரி தற்கொலை விவகாரம்; ஓபிஎஸ் தம்பி மீதான வழக்கில் நவ.13ல் தீர்ப்பு: திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : OPS ,Dindigul ,Nagamuthu ,D. Kallipatti ,Periyakulam, Theni district ,Kailasanathar ,Kailasapatti ,Chief Minister ,O. Panneerselvam ,O. Raja ,Thambi ,Dinakaran ,
× RELATED பூசாரி தற்கொலை வழக்கில்...