×
Saravana Stores

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜர் கோயிலில் சேதமடைந்த கொடிமரத்திற்கு பதில் புதிய கொடிமரம்: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயில் கொடிமரத்தை அகற்றி விட்டு, புதிய கொடிமரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவிந்தராஜரின் பக்தர் ஹரிஹரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், கொடிமரம் தொடர்பாக சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையில் 1860ம் ஆண்டு பிரச்னை ஏற்பட்டது. இது சம்பந்தமான வழக்கில் இரு தரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது. அதன்படி கொடிமரத்தை அலங்காரமாக வைத்துக் கொள்வது எனவும், எந்த பூஜையும், பிரமோற்சவ விழாவும் நடத்தக் கூடாது என்றும் சிதம்பரம் முன்சீப் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 160 ஆண்டுகளாக எந்த பிரமோற்சவம் நடத்தப்படவில்லை.

தற்போது கொடிமரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் அமைப்பது, முன்சீப் நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது மட்டுமல்லாமல், சடங்கு, சம்பிரதாயங்களுக்கும் எதிரானது. எனவே, தில்லை கோவிந்தராஜர் கோயிலில் புதிய கொடிமரம் அமைக்க தடை விதிக்க வேண்டும். புதிய கொடிமரம் அமைக்கும் திட்டத்தை கைவிடும்படி அறநிலைய துறைக்கு உத்தரவிடவும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சாய்குமரன் ஆஜராகி, புதிய கொடி மரத்தை அமைத்துவிட்டு பின்னர் பிரமோற்சவம் நடத்துவதற்கு அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது என்பதால் புதிய கொடிமரத்தை அமைக்க கூடாது என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை மறுத்த அறநிலையைத் துறை தரப்பு சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், கோயிலுக்கு பிரமோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு வேறொரு அமர்வில் விசாரணையில் உள்ளதால் தற்போதைக்கு பிரமோற்சவம் நடத்தப்பட மாட்டாது. கொடிமரம் சேதமடைந்துள்ளதால் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அறநிலையத்துறை தரப்பின் இந்த வாதம் குறித்து அறநிலையத்துறை ஆணையர் ஒரு வாரத்தில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post சிதம்பரம் தில்லை கோவிந்தராஜர் கோயிலில் சேதமடைந்த கொடிமரத்திற்கு பதில் புதிய கொடிமரம்: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chidambaram Thillai Govindaraja ,Charitable Ministry ,High Court ,Chennai ,Hariharan ,Govindaraja ,Chennai High Court ,Thillai Govindaraja temple ,Chidambaram Nataraja Temple ,Shaivites ,Vaishnavisms ,Chidambaram Thillai Govindaraja Temple ,Court ,
× RELATED போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை...