சென்னை: ஸ்வீடனை சேர்ந்த ஐகியா உட்பட 4 புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் முனையங்களை தொடங்க உள்ளதாக இந்தியாவிற்கான ஸ்வீடன் தூதர் ஜேன் தெஸ்லெப் தெரிவித்துள்ளார். 2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். உள்நாட்டு தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் அதேவேளையில், வெளிநாடுகளில் இருந்தும் தொழில் முதலீடுகளை பெற தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இதனால் கூடுதல் முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை உருவாக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு, ஸ்வீடன் நாட்டு நிறுவனங்களுடன், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து ஸ்வீடன் தூதர் ஜேன் தெஸ்லெப் தலைமையில் 15 நிறுவன அதிகாரிகள் குழு தங்களது தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் ஸ்வீடன் நிறுவனங்கள் சென்னை மற்றும் கோவையில் தங்களது நிறுவனங்கள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்வீடன் நாட்டு தூதர் ஜேன் தெஸ்லெப் கூறியதாவது: ஐகியா உள்பட 4 நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 70 சுவீடன் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 25,000 பேர் பணிபுரிகின்றனர். டிரெல்போர்க் மெரைன் சர்வீசஸ், சாப், கேம்பில் மற்றும் ஐகியா நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஸ்வீடன் நிறுவனங்கள் சில தங்களது தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளன.
இதனிடையே சென்னையில் ஸ்கேண்டினாவியான் ரோபோட் சிஸ்டம்ஸ் புதிய தொழிற்சாலையை 2025 ஜனவரி 24ல் தொடங்குகிறது. கோவையில் ஜேகோபி நிறுவனம் தனது புதிய ஆலைக்கான பணியை 2025 ஜனவரி 22ல் தொடங்க உள்ளது என ஸ்வீடன் நாட்டு தூதர் ஜேன் தெஸ்லெப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு, ஸ்வீடன் இடையே நீண்டகாலமாக உற்பத்தி துறையில் வலுவான உறவு உள்ளது. சமீபத்தில் ஸ்வீடனை சேர்ந்த பல நிறுவனங்கள், சர்வதேச திறன் மையங்களை அமைக்க தமிழகத்தை தேர்வு செய்துள்ளன. வரும் காலங்களில் இரு தரப்புக்கும் இடையேயான உறவு, பசுமை மின் திட்டங்கள் போன்ற புதிய துறைகளிலும் வலுப்பெறும் எனக் கூறியுள்ளார்.
The post தமிழ்நாட்டில் ஸ்வீடனை சேர்ந்த 4 புதிய நிறுவனங்கள் தொழில் முதலீடு: சென்னை, கோவையில் விரிவாக்கம் appeared first on Dinakaran.