×
Saravana Stores

உன்னதத் தமிழில் உபதேசம்

திருப்பம் தரும் திருப்புகழ்-12

உள்ளூர் விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவதென்பது ஓரளவுக்கு எளிது. ஆனால், உலகளவில் நடக்கும் போட்டிகளில் வெற்றிக்கோப்பையை விரல்களில் ஏந்துவது ஒரு சிலர்க்கே வாய்க்கும் உன்னதம் அல்லவா! அப்படித்தான்! ஞானமுருகனிடம் நல் உபதேசம் பெறுவதும்! முருகக் கடவுளே முன்வந்து இரு செவிகுளிர உபதேசம் செய்வது என்பது எல்லோருக்கும் கிடைத்து விடுமா, என்ன? மூவர்தான் அத்தகைய முதன்மையான பாக்கியம் பெற்றவர்கள்.

‘‘உபதேச மந்திரப் பொருளாலே
உனைநான் நினைந்து அருட்பெறுவேனோ!’’
– என்று பாடுகிறார் அருணகிரியார்.
உயரிய பரிசான உபதேசத்தை முருகனிடமிருந்து பெற்ற மூவரை, முருகர் அந்தாதிப் பாடல் இவ்வாறு குறிப்பிடுகின்றது.
“வேலா சரணம் சரணம்! என்மேல் வெகுளாமல் இனி
மேலாயினும் கடைக்கண் பார்! பருப்பத வேந்தன் மகள்
பாலா! குறுமுனியார்க்கும் திருப்புகழ்ப் பண்ணவர்க்கும்
ஆலாலம் உண்டவர்க்கும் உபதேசித்த என் ஆண்டவனே!’’
– திருமுருக வாரியார் கூறுகிறார்;

தேவர்களிலே சிறந்த ஒருவருக்கும், முனிவர்களிலே சிறந்த ஒருவருக்கும், மனிதர்களிலே சிறந்த ஒருவருக்கும்தான் முருகப் பெருமானின் உபதேசம் வாய்த்தது.
தேவசிரேஷ்டர்: சிவபெருமான்.
முனிசிரேஷ்டர்: அகத்தியர்.
நரசிரேஷ்டர்: அருணகிரிநாதர்.
முனிவர் வரிசையில் முதலில் நிற்கும் பொதிகைமலை அகத்தியர்க்கு பிரணவ உபதேசம் புரிந்ததை;
‘சிவனை நிதர் பொதியவரை முனிவன்
அதம் மகிழ இருசெவிகுளிர
இனிய தமிழ் பகர்வோனே!’
என்று திருச்செந்தூர் திருப்புகழிலே குறிப்பிடுகிறார், அருணகிரியார். அந்த பாடல் முழுவதையும் பார்ப்போம்;

“அறிவழிய மயல் பெருக உரையும்
அற விழிசுழல
அனல் அவிய மலம் ஒழுக அகலாதே
அனையும்மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ
அழலின் நிகர் மறளினென அழையாதே
செறியும் இரு விளை கரண மருவு புலன் ஒழிய உயர்
திருவடியில் அணுகவரம் அருள்வாயே!
சிவனை நிகர் பொதிய வரை முனிவன் அகம்மகிழ இரு
செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே!
நெறி தவறி அலரிமதி நடுவண் மதபதி முனரி
நிருதி நிதிபதி கரிய வனமாலி
நிலவு மறையவள் இவர்கள் அலைய
அரசுரிமைபுரி
நிருதன் உரம் அற அயலை விடுவோனே!
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இருவிழியும்
மகிழ மடிமிசை வளரும் இளையோனே!
மதலை தவழ் உததியடை வருதரள மணி புளின
மறைய உயர் கரையில்உறை பெருமாளேஃ’’
‘‘பிரணவ உபதேசம் செந்தமிழிலேயே செய்யப் பெற்றது என அருணகிரியார் கூறுகிறார்.’’

‘‘சிவனார் மனங்குளிர உபதேசமமந்திரம் இரு
செவிமீதிலும் பகர் செய் குருநாதா எனவும்
கொன்றைச் சடையர்க்கு ஒன்றைத் தெரிய
கொஞ்சித் தமிழை பகர்வோனே!’’
என்றும்;

‘பழைய நினது வழி அடிமையும் விளங்கும் படிக்கும்; இனிது உணர்த்தி அருள்வாயே!’ என்றும் தந்தை மகிழ தனயன் உபதேசம் நிகழ்ச்சி யதையும், தான் பெற்ற தனி அனுபவத்தையும் பாடல்களில் பாங்குறக் காட்டுகின்றார். இறுதிக் காலத்தில் இறப்பு நேரிடும் போது என்னென்ன இன்னல்களை ஒருவன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைச் சற்று விரிவாகவே இத்திருப்புகழில் எடுத்துரைக்கின்றார் அருணகிரிநாதர். காரணம், நாம் இளமையில் உறுப்புகள் தத்தம் கடமையை ஒழுங்காக நிகழ்த்தும் போதே, இறைநெறியில் இயங்கவில்லை. உயிர்களிடத்து அன்பு காட்டவில்லை. அதன் காரணமாகவே அந்திம நேரத்தில் இந்த அவஸ்தைகளை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். கந்தர் அலங்காரத்தில் நம் அலையும் நெஞ்கத்திற்கு அறிவுரை
கூறுகின்றார்.

“பாலென்பது மொழி! பஞ்சென்பதுபதம்!
மங்கையர்கள் கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ
செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை! கொற்ற மயூரம் என்கிலை!
வெட்சித் தண்டை
கால் என்கிலை! மனமே
எங்ஙனே முக்தி காண்பதுவே!’’
மறலி என்னும் எமன் என்னை

எதிர்கொள்ள வரும்போது என் அறிவு தடுமாறுகிறது! உரை குழறுகிறது! விழி சுழலுகிறது! உடல் சூடு தணிகின்றது! உறவினரும், இல்லாளும் அழுகின்றனர்! இவ்வூலகை விட்டு அடியேன் நீங்குகின்ற அச்சமயத்தில் ஆறுமுகரே! தாங்கள்தான் ஆறுதல் தந்து அடியேனைக் காத்தருள வேண்டும்.

‘‘கார்மா மிசை காலன் வரிற் கலபத்து
ஏர்மா மிசை வந்து எதிரப் படுவாய்ஃ’’
என வேலனுக்கு வேண்டுகோள் விடுக்கும் இத்திருப்புகழில் அரக்கன் சூரபத்மன் அரசாண்ட விதத்தை நான்கே வரிகளில் நயம்படக் கூறுகின்றார்.

“நெறிதவறி அலரி மதி நடுவண் மகபதி முளரி
நிருதி நிதிபதி கரியவனமாலி நிலவு
மறைவன்
இவர்கள் அலைய அரசுரிமை புரி நிருதன்
உரம் அற அயிலை விடுவோனே!’’

எத்தகைய கொடுங்கோல் அரசனாக சூரன் ஆட்சி புரிந்தான் என்பதை மிகவும் சுருக்கமாகவும், அதே சமயம் செறிவாகவும், தொடுத்த சந்தம் பிறழாமலும் எடுத்துச் சொல்கிறார் வாக்கிற்கு அருணகிரி! தேவர்களின் வீழ்ச்சியையும், அசுரர்களின் ஆட்சியையும் விவரிக்கும் அருணகிரியார், ஆட்சிப் பொறுப்பு அநியாயம் செய்யும் அக்கிரமக் காரர்களிடம் வந்தால் நல்லவர்களின் நிலை எத்தகைய பரிதாபத்திற்கு ஆளாகும் என்பதை இத்திருப்புகழில் படம் பிடிக்கிறார்.

“அலரி என்றால் சூரியன், மதி – சந்திரன், நடுவண் – எமன்,
மகபதி – இந்திரன், முளரி – அக்கினி, நிருதி – திசைத் தலைவன்
நிதிபதி – குபேரன், கரியவனமாலி – திருமால்.’’
மேற் சொன்ன அனைவரையும் வெவ்வேறு தொழில்களில் மாற்றி அவர்கள் இதுவரையும் அனுபவித்து வந்த அத்தனை வசதிகளையும் இழக்கச்செய்து அடிமைச் சேவகம் புரியச்செய்தான்.
“சூரப்தமன் இமையவர்க்கு ஏற்பட்டஇன்னல்களை நீக்கி
கொடுங்கோலனின் கொட்டத்தை அடக்கி அமரர் உலகத்தில்
அமைதி ஏற்படச்செய்த தேவ சேனாதி பதியான திருமுருகரே!
மரணத் தருவாயில் கருணை கூர்ந்து அடியேனைக் காத்தருள்க!
செந்தூர் மேவிய தேவாதி தேவரே!’’

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

The post உன்னதத் தமிழில் உபதேசம் appeared first on Dinakaran.

Tags : Upadesam ,Lord ,God ,Utnath ,
× RELATED திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில்...