×
Saravana Stores

கோயிலுக்குச் செல்கிறீர்களா?

நாம் எல்லோருமே புண்ணியம் செய்வதர்கள். என்ன புண்ணியம் செய்தோம் என்று கேட்கிறீர்களா? ஒன்று நாம் மனிதர்களாக பிறந்திருக்கின்றோம். பிறவிகளிலேயே உயர்ந்த பிறவி மனிதப் பிறவி. அந்த மனிதப்பிறவியை நாம் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது வேறு விஷயம். ஆனால், மற்ற பிறவிகளைவிட மிகச் சிறந்த பிறவி மனிதப் பிறவி. அந்த மனிதர்களாகப் பிறந்திருக்கிறோம் என்பது முதல் பேறு. அடுத்ததாக நாம் இந்த பாரத தேசத்திலே பிறந்திருக்கின்றோம். “பாரத நாடு பழம் பெரும் நாடு, நீர் அதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்’’ என்று பாரதி பாடிய பாரத நாட்டிலே பிறந்திருக்கிறோம். அந்த பாரதநாட்டிலும் தட்சிணபூமிக்கு தெற்கே குறிப்பாக தென்னிந்தியாவிலே பிறந்திருக்கின்றோம். தென்னிந்தியாவிலேயே தமிழ்நாட்டிலே பிறந்திருக்கின்றோம்.

தமிழ் மொழி பேசுபவர்களாக பிறந்திருக்கின்றோம். இவைகள் எல்லாம் நாம் பெற்ற பேறுகள். இங்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற முதுமொழிக்கு ஏற்ற நம்முடைய தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் கோயில்கள்தான். “கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்” என்றல்லவா பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.நம்முடைய தமிழ்நாட்டில் சுமார் 4 லட்சம் கோயில்கள் இருக்கின்றன என்று ஒரு கணக்கு சொல்கின்றது. ஆக தமிழ்நாட்டில் கோயில்கள் இல்லாத ஊரே இல்லை என்று சொல்லலாம். மக்கள் தங்களுடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே கோயிலையும், தெய்வ வழிபாட்டையும் கருதினார்கள்.

இந்த இரண்டும் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால், ஆன்மிகத்தில் இந்தக் கோயில் வழிபாட்டு முறைகள் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எந்தக் கோயிலில் எப்படி வணங்குவது? எப்படி கோயிலுக்குள் சென்று தரிசித்து வருவது என்றெல்லாம் சில முறைகள் இருக்கின்றன அவைகள் எல்லாம் நாம் மறந்துவிட்டோம்.கோயிலில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை நாம் புரிந்துகொண்டு ஒவ்வொரு ஆலயதரிசனம் செய்யும் பொழுது நமக்கு அந்த ஆலய வழிபாட்டினால் கிடைக்கின்ற பலன் முழுமையாக கிடைக்கும். முதலில் கோயிலுக்குச் செல்லும் பொழுது எந்த பதற்றமோ அவசரமோ இருக்கவே கூடாது.

ஒரு சின்ன உதாரணம். ஸ்ரீ ரங்கத்தில் பராசரபட்டர் என்று ஒரு ஆச்சரிய புருஷர் இருந்தார். அவர் கோயிலை வலம் வருகின்ற பொழுது மிக மிக மெதுவாக, அந்த இறைவனையும், அந்த கோயிலின் பல்வேறு விதமான சிற்பங்களையும், அமைப்பையும் பற்றிச் சிந்தித்த வண்ணம் வலம் வருவாராம். ஏதோ காலில் சக்கரம் கட்டிக் கொண்டது போலவோ, அல்லது வெந்நீர் ஊற்றிக் கொண்டது போலவோ அவசர அவசரமாக போனோம் வந்தோம் என்று இருக்கக் கூடாது. ஒரே நாளில் ஐந்து கோயில்கள், ஆறு கோயில்கள் எல்லாம் சில பேர் தரிசனம் செய்துவிட்டு, இத்தனைக் கோயில்களை நான் தரிசனம் செய்தேன் என்று சொல்வதில் எந்தப் பெருமையும் கிடையாது. அது முறையான வழிபாடாகவும் அமையாது.ஒரு கோயிலுக்குள் சென்றால், குறைந்த பட்சம் ஒரு இரவு தங்க வேண்டும் என்றெல்லாம் அப்பொழுது சொல்லுவார்கள்.

அப்படி இல்லாவிட்டாலும்கூட ஒரு அரை நாள் அந்த கோயிலில் அமர்ந்து அந்த இறைவனைக் குறித்துச் சிந்தித்து நிதானமாக வலம் வந்து அங்கே நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனைகள் போன்ற விசேஷங்களை எல்லாம் மனம் ஒன்றி தரிசனம் செய்து வருவதுதான் சிறந்தது. அப்பொழுதுதான் அந்தக் கோயிலை நாம் முறையாக தரிசித்ததாகப் பொருள்.அப்படி இல்லாமல் ஒரு டைரியில் 15 கோயில்களைக் குறித்துக் கொண்டு காரில் ஏறினோம் இறங்கினோம் அந்தக் கோயிலுக்குள் உள்ளே சென்று, பத்து நிமிடங்களுக்குள் வெளியே வந்தோம், அடுத்த கோயில் பார்ப்பதற்காகப் பறந்தோம் என்பது ஒரு சிறந்த வழிபாடாக இருக்காது. எந்தக் கோயிலிலே, எதைப் பார்த்தோமோ அது மனதில் நிற்காது.

நாம் சில நிமிடங்கள் நின்று, பார்த்து, தரிசனம் செய்து, நம்முடைய குறைகளை எல்லாம் சொல்ல அதை கேட்பதற்கு தானே அந்தப் பெருமானே ஆலய கருவறையில் நின்று கொண்டிருக்கின்றான். அப்படி இருக்கும் பொழுது, ஏதோ திருமண வீட்டுக்குச் சென்று, மொய்யெழுதி விட்டு வருவது போல, ஆலய வழிபாடு செய்வது சிறந்த வழிபாடாக இருக்காது. அது நம்முடைய கோரிக்கையையும் நிறைவேற்றித் தராது. கோயிலுக்கு வரும் பொழுதும், எத்தனையோ குறைகளோடு வந்திருப்போம். இறை வழிபாடு செய்த பிறகு, ஒரு நிம்மதி, மகிழ்ச்சி, பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து விட்டோம், இனி அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

திரும்பிச் செல்லும் பொழுதும், நமது மனதில் உள்ள அனைத்து விதமான தீய எண்ணங்கள் முழுவதுமாக நீங்கியிருக்க வேண்டும். கோயிலில் பலிபீடம் என்று ஒரு இடம் இருக்கும். அங்கே விழுந்து வணங்கி பொறாமை, ஆற்றாமை, இயலாமை போன்ற எல்லா வேண்டாத விஷயத்தையும் பலி கொடுத்துவிட்டுத்தான் மேலே செல்ல வேண்டும். எந்த கறை படிந்த எண்ணங்களும் நமது மனதில் இருக்கக்கூடாது. வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள், பகவான் இவர்களைப் பார்க்கச்செல்லும் போது வெறும் கையுடன் போகக்கூடாது என்கிறது சாஸ்திரம். இதை ஆண்டாள் ஒரு திருப்பாவையில் பாடுகிறாள்;

“மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்’’

இதில் கடைசி வரி முக்கியம்.தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.” என்ற தொடரில் கோயில் வழிபாட்டில், மனம், செயல், உடல் தூய்மை (முக்கரண சுத்தி) முக்கியம் என்று ஆண்டாள் உரைக்கிறாள். பிறப்பு, இறப்பு போன்ற இடங்களுக்கு சென்ற பின் குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக்கூடாது. அதே போல் குளிக்காமலும் கோயிலுக்குள் செல்லக் கூடாது. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக் கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது. ஈரத் துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன. அதனை அடுத்த இதழில் பார்ப்போம்.

தேஜஸ்வி

 

The post கோயிலுக்குச் செல்கிறீர்களா? appeared first on Dinakaran.

Tags :
× RELATED தெரிவது பிம்பமல்ல, பரம்பிரம்மம்!