×
Saravana Stores

கலைகளை அருளும் ராஜமாதங்கியே மீனாட்சி

கதம்ப வநவாசினி… தொடர்ச்சி

உபநிஷதங்களெல்லாம் ஆரண்யத்திலிருந்து அதாவது வனத்திலிருந்து வரவேண்டும். ஏன், மகான்களெல்லாம் இயற்கையோடு சேர்ந்த இடமாக அமைக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் என்னவெனில், பஹிர்முகத்தை அதாவது வெளிமுகமாக அலையும் மனதை, அந்தர்முகமாக்கும் அதாவது உள்முகமாக்கும் பெரிய கருவியே (instrument) இயற்கையே ஆகும். அதனால்தான் மகான்கள் இயற்கையோடு இணையக் கூடிய வழியை காண்பித்துக் கொடுக்கிறார்கள்.

இன்னொன்று எல்லாவற்றையும் விட முக்கியமானது, இந்த பிரபஞ்சமாக இந்த இயற்கையாக எது விரிந்திருக்கிறதெனில், சாட்சாத் அந்த சத்திய வஸ்துதான் விரிந்திருக்கிறது. அதனால்தான் மகாலட்சுமி அஷ்டோத்திரத்தில் முதல் நாமாவளி என்னவெனில், பிரக்ருத்யை நமஹ… என்பதாகும். இந்த இயற்கையாக இந்த இயற்கையாக இருப்பவள் யாரெனில் அவள்தான். இப்போது அதைப் பார்க்கும்போது அந்த சத்தியத்தினுடைய தரிசனம் நடக்கும்.

சத்தியத்தினுடைய தரிசனம் நடக்கும்போது இவனுடைய விஷயம் இல்லாமலேயே இவனுக்கு
அந்தர்முக திருஷ்டி ஆகிவிடுகின்றது. So we can connect external to internal. இப்படி இயற்கை மூலமாக effective ஆக நடக்கின்றது என்று தெரிந்ததுனால… மகான்கள் ஆன்மிகத்தையும் இயற்கையையும் ஒன்றாக இணைத்தார்கள். கும்பாபிஷேகத்தின்போது யாக சாலை மற்றும் மூல ஸ்தானத்தில் இருக்கக் கூடிய பிம்பத்திற்கும் விமானத்தில் இருக்கக் கூடிய கலசத்திற்கும் அந்த சாந்நித்தியத்தை கடத்திக் கொண்டு போகும் முறையே நாடி சந்தானம் என்று பெயர். இதற்குத்தான் நாடி சந்தானம் என்று பெயர்.

நம்முடைய உடலில் இந்த நாடி சந்தானம் எதுவென்று பார்த்தால், இந்த நாடிகளெல்லாம் கூடக்கூடிய இடம் எதுவென்று பார்த்தால், அது நம்முடைய இருதய ஸ்தானமாகும்.
அதேபோன்று இந்த கதம்ப வனத்தில் கதம்ப மரங்களெல்லாம் ஒன்றோடு ஒன்று பிணைந்து கூடியிருப்பதனால், கதம்ப வனம் என்பது நம்முடைய இருதய ஸ்தானமாகும். இந்த இருதய ஸ்தானமாக இருக்கக் கூடிய கதம்ப வனம் மூலமாகத்தான், இன்னும் சொல்ல வேண்டுமானால் அந்த இருதயம் மூலமாகத்தான் அந்த natureஐ பார்க்க முடியும்.

இந்த இருதயம் மூலமாகத்தான் அந்த அன்பை அனுபவிக்கமுடியும். உயர்ந்த எந்த உணர்வாக இருந்தாலும் இருதயம் மூலமாகத்தான் பார்க்க வேண்டும் அல்லது அனுபவிக்க வேண்டுமே தவிர… அங்கு நாம் ஜே.கே. சொல்வதுபோல மனம் மூலமாக, எண்ணங்களின் சொல்படி அனுபவித்தால் சரியாக இருக்காது. அப்படி இருதயம் மூலமாக அனுபவிப்பது என்பதையும் அம்பிகையே அருள்வாள். ஏன் brain அல்லது மனதை உபயோகப்படுத்தி இயற்கையை பார்த்தோமெனில், நமக்கு HOW என்கிற கேள்வி வரும். அப்போது இந்த how என்கிற கேள்விக்கு விடையே கிடையாது.

ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய where, when, what, who… இதுக்கெல்லாம் விடை இருக்கிறது. ஆனால், இயற்கையைப் பொறுத்தமட்டிலும் how என்பதற்கு விடையே கிடையாது. H2o water என்பது இயற்கை. How h2o என்பதைச் சொல்லவே முடியாது. ஏதேனும் விளக்கங்கள் கொடுக்கலாம். ஆனால், How h2o என்று மட்டும் சொல்லவே முடியாது. அதனால், வெறும் மூளையை உபயோகப்படுத்தி இயற்கையை பார்த்தால் இது எதனால்… இது எதனால்… என்கிற கேள்வி வரும். ஆனால், இருதயத்திலிருந்து பார்த்தால் என்ன ஆகின்றதெனில், இங்கு ஒரு
முக்கியமான விஷயம் நடக்கிறது.

மூளையினால் இவர் தர்க்கரீதியாகக் கேட்டபோது இவன், எப்படி எப்படி என்று கேட்டுக் கொண்டே இருந்தான். இருதயத்திலிருந்து இந்த பிரகிருதி பார்த்தோமெனில் என்ன ஆகிறதெனில், இந்த how என்பதில் இருக்கக் கூடிய w முன்னால் வந்து விடுகின்றது. How இப்போது who ஆக மாறிவிடுகின்றது. இங்கு who என்பது who am I என்கிற ஆத்ம விசாரத்தில் கொண்டுபோய் விடுகின்றது.

கடைசியில் who am I ல் who am போய் I அப்படியே இருக்கிறது. இந்த I ஆனது, அஹம் ஸ்பூர்த்தியாக இருதய ஸ்தானத்தில் இருக்கிறது. இந்த இருதய ஸ்தானமாக கதம்ப வனம் இருக்கிறது. அதற்குள் அம்பாள் இருக்கிறாள். எப்படி பிரம்மரந்திரப் பகுதியை ஆக்ஞா சக்கரத்தில் சேனாநாயகியாக தண்ட நாதாவாக எப்படி வாராஹி இருந்தாளோ, அங்கு ஒரு force இருந்தது என்று பார்த்தோம். இங்கு அப்படியே நமக்காக இறங்கி வந்திருக்கிறாளே… கதம்ப வனத்தில் மஹா சியாமளாவாக ராஜமாதங்கியாக… சங்கீத யோகினியாக மீனாட்சியாக அம்பிகை இருக்கிறாள். அதனால்தான் மதுரையில் மூலஸ்தானத்தில் நான்கு கையில் இல்லை. இரண்டு கைகளோடு அருள்பாலிக்கிறாள்.

நான் விஸ்வரூபம் காண்பித்தேன். சதுர்புஜம் காண்பித்தேன். எதற்கும் திகைக்காதே. பயப்படாதே. நான் உன் அம்மா… இரண்டு கைகளோடு அருள்பாலிக்கிறேன். நீ என் முன்னால் இருக்கிறாய். உன்னை அரவணைத்து உனக்குக் காண்பிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. நீதான் நான். நான் தான் நீ என்று காண்பிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு.
இங்கு ராஜ சியாமளாவாக அம்பிகை இருக்கும்போது என்ன ஆகின்றது எனில், அவள் சங்கீத யோகினியாக இருக்கிறாள். இனிமையான நாதத்திற்கு உரியவளாக இருக்கிறாள். இனிமையான நாதம் எங்கிருந்து தொடங்குகிறதெனில், நம்முடைய ஹிருதய ஸ்தானமான அநாகதத்திலிருந்து தொடங்குகிறது.

அதனால்தான் ஸ்ரீ வித்யா சம்பிரதயாத்துல சியாமளாவான ராஜமாதங்கியை சொல்லும்போது, சங்கீத யோகினி… என்றும் வேணு ஷியாமளா என்று புல்லாங்குழல் வாசிக்கிறவளாக சொல்வது வழக்கம். வீணா ஷியாமளா என்று வீணை வாசிக்கக் கூடியவளாக, கதம்ப வாஸினி ஷியாமளா என்றெல்லாம் சொல்வது வழக்கம். அம்பிகையினுடைய சொரூபங்களில் இத்தனை சொரூபங்கள் இருக்கின்றன. எல்லாமே மென்மையிலும் மென்மையானது. எவ்வளவுக்கு எவ்வளவு மென்மையாக… எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு வெண்ணெயினும் மென்மையாக உருகக் கூடியவளாக அம்பிகை இருப்பாளோ அப்படி இருக்கிறாள் அம்பிகை. லகுவாக…. எனவே, லகு ஷியாமளா என்றெல்லாம் மீனாட்சியை சொல்வார்கள்.

இங்கு என்ன காண்பித்து கொடுக்கிறாளெனில், force fullஆக பண்ண வேண்டியதையும் பண்ணுவேன். ஆனால், அந்த force ஐ நமக்குத் தெரியாமலேயே நம்மை அழகாகக் கொண்டு போவாள். எப்படி இயற்கையின் வழியாக நம்முடைய பார்வையை உள்முகமாக திருப்புவாளோ, அதுபோன்று மென்மையாக ராஜ மாதங்கியாக, ராஜ ஷியாமளாவாக, மீனாட்சியாக இருக்கிறாள். ஸ்ரீ வித்யாவில் கதம்பவனத்தில் அம்பிகை மந்திரிணியாக, மகா மந்திரிணியாக இருக்கிறாள். இங்கு எல்லாமே அறிவுப் பூர்வமாகவும் மென்மையாகவும் நடக்கும். ஆனால், இந்த இரண்டையுமே அவள்தான் நடத்துகிறாள்.

இந்த ப்ரகிருதி கதம்ப வனம். நம்முடைய இருதய ஸ்தானம் கதம்ப வனம். இந்த known ல் இருக்கக் கூடிய விஷயத்தையும் un known ல் இருக்கக்கூடிய விஷயங்கள்தான் க்ஷேத்ரங்கள் என்று பார்த்தோம். அப்படிப் பார்க்கும்போது சென்ற நாமமான மஹாபத்மாடவீ க்கு திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி என்று பார்த்தோம். இந்த நாமாவில் இந்த மொத்த பிரபஞ்சமும் இந்த மொத்த ப்ரகிருதியாக இருக்கிறது. இந்த இரண்டையும் இணைக்கக் கூடிய க்ஷேத்ரமானது மதுரமாக இருக்கக்கூடிய மதுரை. இதற்குமேலும் இந்த நாமத்திற்கான கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்று சொல்லத்தான் வேண்டுமோ!

இப்போது, இந்த இடத்தில் இதற்கு முந்தைய நாமாவான… மகாபத்மாடவீ என்று பார்த்தது என்னவெனில், பத்து பனை மரத்திற்கு அளவிற்கு தண்டு, தங்கத்தால் இலைகள். பெரிய விஸ்தீரமான தாமரைப் பூ. அதில் ஒவ்வொரு கேசரமும் ஒவ்வொரு பனைமரம் அளவிற்கு கேசரமாக இருக்கிறது. இதையெல்லாம் பார்த்தால் நமக்கு அந்த பிரமாண்டம் அந்த அகிலாண்டத்தை தரிசனம் செய்கிறோம். ஆனால், நாம் பார்த்த இந்த know fieldல் இருக்கிற natureக்கு இது சரியா என்று பார்த்தால், வருமா என்றால் வராது. இதற்கு முன்னால் பார்த்தது என்ன என்றால், மகாபத்மாடவீ ஸம்ஸ்தா என்றால் that which is beyond nature… நாம் பார்க்கக்கூடிய இந்த known fieldல் இருக்கக் கூடிய இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயம்தான் நாம் போன நாமாவில் பார்த்த மகாபத்மாடவீ ஸம்ஸ்தா என்பதாகும்.

அவள் என்ன செய்கிறாள் எனில் அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுத்து நம்மிடம் இருக்கக் கூடிய limitations எல்லாவற்றையும் உடைத்தெடுத்து கொண்டு போய்விடுகிறாள். அங்கு எல்லாமுமே பிரமாண்டமாக அகிலாண்டமாக இருக்கிறது. அதனால்தான், சென்ற நாமத்தில் known விஷயத்திற்கும் un known விஷயத்திற்கும் அம்பாள் ஒரு connection ஏற்படுத்துகிறாள்.
இப்போது நாம் சாதாரண பக்தர்களாக, குழந்தைகளாக இந்த known fieldக்குள் இருக்கிறோம். இப்போது இந்த known fieldக்குள் அம்பிகையை தரிசனம் செய்ய வருகிறோம். அப்போது அவள் அதை உடைத்து unknown field என்கிற நம் மனதைத் தாண்டிய தளத்திற்குக் கொண்டு செல்வாள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இப்போது known fieldக்குள் குழந்தைகளாக வருபவர்களுக்கு அம்பிகை என்ன செய்வாளெனில், இந்த known fieldல் இருந்துதான் தொடங்குவாள். நமக்கு known field எங்கிருந்து தொடங்குகிறதெனில் இந்த இயற்கையிலிருந்துதான் தொடங்குகிறது. இந்த natureதான் நமக்கு known field. இப்போது இந்த nature ஐ இதற்கு முன்னாடி மஹாபத்மாடவீ என்று சொன்னது beyond nature. நமக்கு ஒரு பிரமாண்டத்தை பார்க்கும்போது ஒரு ஆனந்தம் ஏற்படுது. அதேநேரத்தில் ஒரு திகைப்பு ஏற்படும். குரு க்ஷேத்ரத்தில் அர்ஜுனன் விஸ்வரூபம் பார்க்கும்போது, ஆஹா… நம் பக்கத்தில் நமக்கு நண்பனாக இருந்த கோபாலன்தான் நமக்கு விஸ்வரூபத்தை காண்பிக்கிறான் என்று நினைக்கும்போது அவனுக்கு ஆச்சரியம்… அதிசயம்… ஆனந்தம். ஆனால், அதையும் மீறி அவனுக்குள் ஒரு திகைப்பு.

‘‘ஐயையோ… இதெல்லாம் எனக்கு பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. உன்னுடைய உருவத்தை சுருக்கிக்கொள்’’ என்றான். உடனே பகவான் சுருக்கிக் கொண்டு சதுர்புஜங்களோடு சங்கு சக்கர கதா பத்மத்தோடு வருகிறார். அப்போதும் கூட அர்ஜூனன் என்ன சொல்கிறான் எனில், இதுவும் எனக்கு அலௌகீகமாக இருக்கிறது. பகவத்கீதையில் ஒரு ஸ்லோகத்தில் ரூபம் அலௌகீகம் என்று வரும். எனக்கு பெரிய விஷயத்தை காண்பிக்கிறாய் புரிகிறது. ஆனால், எனக்குப் புரியவில்லை என்கிறான். இப்போது அதேமாதிரிதான் இங்கு, அலௌகீகமான beyond nature தான் இதற்கு முந்தைய நாமத்தில் பார்த்தோம். இப்போது நமக்கு அந்த திகைப்பை அம்பாள் என்ன செய்கிறாள் எனில், ‘‘கவலைப்படாதப்பா… அந்த திகைப்பெல்லாம் ஒன்றும் இல்லை என்று அந்த திகைப்பையெல்லாம் நீக்குகிறாள்.

ஒரு குழந்தைக்கு அம்மாவின் ஸ்தானம் பெரிய விஷயமாக இருக்கலாம். அம்மாவிற்கு எல்லாமுமே தெரிந்திருக்கலாம். ஆனால், அந்த குழந்தைக்கு முன்னால் வந்தால், அந்த குழந்தையினுடைய நிலைக்கு அம்மா தன்னுடைய அன்பால இறங்கி வந்து, அந்தக் குழந்தைக்கு சொல்ல வேண்டியதைச் சொல்வாளோ… அம்மா phd முடித்த அம்மாவாக இருக்கலாம். ஆனால், அந்த குழந்தை நிலைக்கு சொல்ல வந்தது எதுவெனில் அன்பு. அந்தக் கருணை மூலமாக எப்படி அந்த குழந்தையின் மொழியிலேயே மழலைச் சொல்லிலேயே சொல்ல வேண்டியதைச் சொல்கிறாளோ… அந்த மகா பாத்மாடவீ… மஹாவாராஹி என்கிற திகைப்பை என்ன செய்கிறாளெனில், நான் எல்லா அகிலாண்டத்தையும் கட்டிக் காக்கக்
கூடிய அகிலாண்டேஸ்வரிதான்.

ஆனால், உனக்கு நான் அம்மா… அந்த நிலையில் உனக்கு என்ன செய்யணுமோ அதை நான் உனக்குச் செய்வேன். இப்படி அந்தத் திகைப்பை நீக்கி நம்முடைய நிலைக்கு அவள் இறங்கி வந்து, இந்த nature என்று சொல்லக் கூடிய அந்த ப்ருக்ருதி சொரூபத்தை காண்பித்துக் கொடுத்து, நம்மால் வாங்கிக்கொள்ள முடியுமான… புரிந்துகொள்ள முடியுமான விஷயங்களைக் கொடுத்து… அந்த unknown field என்பதை நம்முடைய known fieldக்கு கொண்டு வருகிறாள் பார்த்தாயா… அதுதான் கதம்பவனம். இதற்காகத்தான் ஜே. கிருஷ்ணமூர்த்தி சூர்ய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும்… மலைகளையும் மரங்களையும் கடலையும் பார்க்கச் சொல்கிறார். அது எப்படி என்று அல்ல. சும்மா பாருங்கள். அதுவே தன்னைத்தானே வெளிக்காட்டும் என்பார்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒரு உதாரணம் சொல்வார். நாம் அழகான மரத்தை பார்க்கின்றோம். சட்டென்று நம்முள் அழகிய உணர்வு தோன்றுகின்றது. வியக்கின்றோம். மனதைத் தாண்டிய ஏதோவொன்று நமக்குள் தோன்றுவதை உணர்கிறோம். அடுத்த விநாடியே நம் மனதிலிருந்து ஒரு ஆசை… அதாவது ஒரு எண்ணம் புறப்பட்டு இந்த மரம் என்னுடைய வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும் என்று நினைக்கத் தொடங்கி விடுகின்றோம். அல்லது அந்த அனுபவத்தை விட்டுவிட்டு இந்த அனுபவம் எனக்கு எப்போதும் வேண்டுமென்று அந்த அனுபவத்தைக் கட்டிப்
போடுகின்றோம்.

அவ்வளவுதான்… அந்த மரம் கொடுத்த அனுபவம் சிறு எண்ணமாக இறுகிப்போய்விடுகின்றது. மனமானது உன்னத அனுபவங்களைச் சேமித்து வைத்து, எனக்கு வேண்டும்… மீண்டும் மீண்டும் வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறது. இதை நாம் விடுத்து, ‘‘எனக்கு… என்னுடையதாக வேண்டும்… ’’ என்று இந்தச் சிறிய me அல்லது self centreக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அந்த அனுபவத்திலேயே தோய்ந்திருந்தால், அதிலேயே இருக்க முடிந்தால் அங்கு பெரிய மாற்றம் ஏற்படும். known என்கிற nature (இயற்கை) gate to the unknown. அவளின் கருணையானது இங்கிருந்து புறப்பட்டு அங்கு செல்கிறது. இந்த பிரபஞ்சத்தினுடைய சூரியனும் சந்திரனும் அவளின் கருணையால்தான் இயங்குகின்றன. அதனால்தான் நமது ரிஷிகள் இயற்கையை வழிபடச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்போது சென்ற நாமமான மஹாபத்மாடவிக்கும் கதம்ப வனத்திற்கும் என்ன வித்தியாசம். மகாபத்மாடவீ என்கிற நாமத்தில் நாம் பார்த்தது எல்லாமே பிரமாண்டம். ஆனால், நாம் காணும் இந்த கதம்ப வனத்தில் எல்லாமே நம்முடைய இடத்தில் இருக்கிறது. எல்லாமே மிகமிக மென்மையாக இருக்கிறது. எல்லாமே நாம் பார்க்கக் கூடிய மரங்களாக இருக்கிறது. அடர்ந்து வளர்ந்திருக்கக் கூடிய மரங்களாகவும்… மணம் வீசக் கூடியதான மலர்கள் இருக்கிறது. பச்சைப் பசேலென்று இலைகள். நம்முடைய கண்களுக்கு குளிர்ச்சியான காட்சி என்று எல்லாமே இந்த கதம்ப வனத்தில் இருக்கிறது. நம்மை நோக்கி அம்பிகையானவள் சொல்கிறாள். நீ எதற்கும் பயப்பட வேண்டாம். அகந்தைக் கிழங்கை எனக்கு எப்படி எடுக்க வேண்டுமென்று தெரியும்.

அதற்காக உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். அந்த ஞானத்திற்கு உன்னை அழைத்துக் கொண்டு போவேன்… என்று இறங்கி வந்து கதம்ப வனத்தின் மூலமாக ஞானத்தையும் தரிசனத்தையும்
அளிக்கிறாள். இப்போது யோக மார்க்கத்திலேயும் ஸ்ரீ வித்யா மார்க்கத்திலேயும்
பார்ப்போம். இந்த கதம்ப வனம் என்பது அடர்ந்து இருக்கிறது. எப்படி இந்த கதம்ப வனம் அடர்ந்து இருக்கிறதோ அதுபோல… சென்ற நாமத்தில் நாம் மூளையைக் கொண்டு அது எப்படி மடிப்பு மடிப்பு உள்ளதோ அதை விரித்தால் எப்படி ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கு பெரிதாகுமோ அதுபோன்று… இந்த நாமத்தில் நமக்குள் இருக்கக்கூடிய எழுபத்தியிரண்டாயிரம் நாடிகள் குறிக்கிறது. இது யோக ரூபமான விஷயமாக இருக்கிறது.

அப்படியே நம்முடைய உடலில் நரம்புகளெல்லாம் ஒன்றோடு ஒன்றாகப் பிணைந்து கூட்டாக இருக்கக் கூடிய நரம்பு மண்டலம் எதுவென்று பார்த்தால், இந்த நரம்பு களெல்லாம் எங்கு வந்து தன்னுடைய ரத்தத்தைச் சுத்தம் செய்துகொள்கிறது என்று பார்த்தால், நரம்புகளெல்லாம் சேரக்கூடியது நம்முடைய இருதயத்தில். அதையே நாம் யோக மார்க்கத்தில் சென்று பார்த்தோமானால்… அவையாவும் சந்திக்கக் கூடியது இதய ஸ்தானமாகும். ஆத்ம ஸ்தானமாகும். இதற்கே நாடி சந்தானம் என்பது பொருளாகும்.

ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா

The post கலைகளை அருளும் ராஜமாதங்கியே மீனாட்சி appeared first on Dinakaran.

Tags : MEENADASHI ,Kathamba Vanavasini ,Rajamathangiye Meenadashi ,
× RELATED சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள...