×

பவனி வரும் வாகனங்களின் தத்துவம்

காளை வாகனம்

காளை மாடு நிலம் உழுது நெற்பயிர் விளைய உழைக்கிறது. ஆனால் அந்த நெல்லிலிருந்து அரிசியை நாம் எடுத்துக் கொள்ள, அதன் வேண்டாத பகுதியான உமியையும் வைக்கோலையும்தான் உண்கிறது. உண்மையான உழைப்பும், தியாக உள்ளமும் ஒரு தாயைப் போல இந்தக் காளையும் மேற்கொண்டிருக்கிறது. அதை உணர்த்தும் வகையில்தான் ஈசனும், உமையும் காளை வாகனத்தில் உலா வருகின்றனர்.

காமதேனு வாகனம்

பாற்கடல் கடையும்போது தோன்றிய அற்புதமான பொருட்களில் காமதேனுவும் ஒன்று. காமதேனு, விரும்பிய எல்லாவற்றையும் அளிக்கவல்லது. தன்னை வழிபடுபவர்கள் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன் என்பதை காமதேனு வாகனத்தில் அருட்பாலிப்பதன் மூலம் தேவி தெரிவிக்கிறாள்.

பூதகி வாகனம்

பூத கணங்களுக்குத் தலைவியாக அம்பிகை விளங்குகிறாள். அம்பிகையின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் தீயவையெல்லாம் தம் சக்திகளை அடக்கிக் கொண்டு இருக்கின்றன. தேவியைப் பணிந்தால், நம் மனதில் உள்ள தீயசக்திகளும், நமக்கு வெளியில் உள்ள தீயசக்திகளும் அழிந்து அந்த இடங்கள் அம்பிகை கொலுவிருக்கும் இடமாக ஆகி விடும் என்பதை இந்த பூதகி வாகனம் உணர்த்துகிறது.

சூரிய வாகனம்

சூரியன் இல்லையேல் உலகில் வாழ்வியல் ஆதாரமே இல்லை. தேவி உபாசகர்களில் ஆதித்தன் எனும் சூரியனே முதலானவன் என்பதை அபிராமிபட்டர் தன் அபிராமி அந்தாதியில், ‘ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன்’ எனும் பாடலில் குறிப்பிட்டுள்ளார். உலகை இயக்குவதும், சூரிய சந்திரர்களை தோன்றிமறையச் செய்வதும் தானே என்பதையும் அனைத்துள்ளும், தான் இருப்பதையும் அம்பிகை அறிவிக்கும் திருக்கோலம் இது.

மயில் வாகனம்

சப்த மாதாக்களில் ஒருவரான கௌமாரியின் திருக்கோலத்தில் அம்பிகை அருள்கிறாள். மயில் உள்ள இடத்தில் பாம்பு, பல்லி போன்ற விஷப்பூச்சிகள் இருக்காது. ஈசன் ஆலகால விஷத்தை உண்டபோது, அவருக்கு மயிலிறகால் வீசியதாக வரலாறு உண்டு. மயிலிறகு விஷத்தை நீக்கும் தன்மையைக் கொண்டது. நம் மனதில் உள்ள காமம், கோபம், மோகம், பொறாமை, சந்தேகம் எனும் விஷங்கள் மயில் வாகனத்தில் கொலுவிருக்கும் அம்பிகையை வழிபட்டால் வெகுண்டு ஓடிவிடும்.

அன்ன வாகனம்

பாலிலிருக்கும் நீரைப் பிரித்து பாலை மட்டுமே அருந்தும் அரிய குணம் கொண்டது அன்னப் பறவை. அதுபோல உயர்ந்தவர்கள், உலகில் மாயைகளை ஒதுக்கி உண்மையான மெய்ப்பொருளான கடவுளை நாடுவர். ஹம்ஸ என்றால் மேலானது என்று பொருள். எனவேதான் மகிமை மிக்க மகான்களை பரமஹம்ஸர் என்று போற்றுகிறோம். அத்தகைய மகான்களின் மனதில், தான் வாழ்கிறேன் என்கிறாள் அம்பிகை. இதை உணர்த்துவதுதான் அன்ன வாகனம்.

யானை வாகனம்

பண்டாசுர வதத்தின்போது ராஜராஜேஸ்வரி தேவியின் அங்குசத்திலிருந்து தேவியின் சக்தியாக உதித்தவள் ஸம்பத்கரீ தேவி. இவள் கோடிக்கணக்கான யானைப் படைகளுக்குத் தலைவியாக, ரணகோலாஹலம் எனும் யானையின் மீது ஏறி, போரில் அம்பிகைக்கு உதவியவள். எதற்கும் அடங்காத யானை அங்குசத்திற்கு அடங்கும். அதே போல நம் ஐம்பொறிகளாகிய யானைகளை மனம் எனும் அங்குசத்தால் அடக்க வேண்டும்.

குதிரை வாகனம்

அம்பிகையின் பாசம் எனும் ஆயுதத்திலிருந்து உதித்தவள் அஷ்வாரூடா தேவி. இவள், யாராலும் வெல்ல முடியாத அபராஜிதம் எனும் குதிரையை வாகனமாகக் கொண்டு கோடிக் கணக்கான குதிரைப்படைக்குத் தலைமையேற்று பண்டாசுர வதத்தின்போது தேவிக்கு உதவினாள். பலவிதமான ஆசைகள் நம்மை அலைக்கழிக்கின்றன. ஆசைகளை நெறிப்படுத்தும் மனமே அஷ்வாரூடா தேவி. சக்தி வாய்ந்த இயக்கத்தை ‘ஹார்ஸ் பவர்’ என தற்போது குறிப்பிடுகிறோம்.

ஜெயசெல்வி

The post பவனி வரும் வாகனங்களின் தத்துவம் appeared first on Dinakaran.

Tags : Bhavani ,
× RELATED நாளை முதல் பவானி விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம்