×

நூல் விலை கிலோவிற்கு 10 ரூபாய் குறைந்தது: பின்னலாடை உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

திருப்பூர்: பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. இது தொழில்துறையினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு நூல் விலை நிலையில்லாமல் உயர்ந்து வந்தது உற்பத்தியாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத சூழலை உற்பத்தியாளர்கள் சந்தித்தனர். நூல் விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தினர்.

வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதி செய்வதை நிறுத்தி உள்நாட்டு உற்பத்திக்கு அதிகளவு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். மாதம் ஒருமுறை நூல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்த நிலையில் மாதத்தின் முதல் தேதியும் 15ம் தேதியும் நூல் விலை நிர்ணயம் செய்த அறிவிப்பு வெளியிடப்படும் என நூற்பு ஆலைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 2024ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நூல் விலை குறைய தொடங்கியது. இது உற்பத்தியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

2024 ஜனவரி மாதம் தொடங்கி 5 மாதத்தில் நூல் விலை கிலோவிற்கு 45 ரூபாய் வரை குறைந்தது. தொடர்ந்து 6 மாத அளவில் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. தீபாவளி முடிந்து நேற்றைய தினம் நூல் விலையை நூற்பு ஆலைகள் வெளியிட்டனர். இதில் கடந்த மாதங்களைக் காட்டிலும் கிலோவிற்கு 10 ரூபாய் குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து வகையான நூல்களின் விலையும் 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பின்னலாடை உற்பத்தியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.266-க்கும், 16-ம் நம்பர் ரூ.270க்கும், 20-வது நம்பர் ரூ.270-க்கும், 25-வது நம்பர் ரூ.279-க்கும், 30-வது நம்பர் ரூ.291-க்கும், 34-வது நம்பர் ரூ.298-க்கும், 40-வது நம்பர் ரூ.347-க்கும், 20-வது நம்பர் சூப்பர் கோம்டு நூல் ரூ.277-க்கும், 25-வது நம்பர் ரூ.286-க்கும், 30-வது நம்பர் சேமி கோம்டு ரூ.280-க்கும், 34-வது நம்பர் ரூ.287-க்கும், 40-வது நம்பர் ரூ.308-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நூல் விலை குறைவு பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் புதிய நம்பிக்கையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், ‘‘நூல் விலை குறைவு வரவேற்கத்தக்கது. நூல் விலை குறைந்துள்ளதால் துணிந்து புதிய ஆர்டர்களை பெறுவதற்கு வசதியாக இருக்கும்’’ என தெரிவித்துள்ளார்.

 

The post நூல் விலை கிலோவிற்கு 10 ரூபாய் குறைந்தது: பின்னலாடை உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!