*2025ம் ஆண்டு தொடக்கத்தில் முழு பயன்பாட்டுக்கு வரும்
திருப்பூர் : தொழில் நகரமான திருப்பூரில் திருப்பூர் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களை சார்ந்த லட்சக்கணக்கானோர் வசிக்க கூடிய நிலையில் திருப்பூரில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் சிகிச்சை மையம் இந்தியாவிற்கே பயனளிக்ககூடிய வகையில் அமையப்போகிறது. இந்தியாவின் காலநிலை மாற்றத்திற்கேற்றவாறு ஆண்டு தோறும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஒன்றிய, மாநில அரசுகள் புற்றுநோய் சதவிகிதத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது குறித்தும், புற்றுநோய் கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் புற்றுநோய் என்பதை அறியாமல் தேவையான சிகிச்சையை பெறமுடியாமல் உயிரிழப்பவர்களும் உண்டு.
ஒன்றிய அரசின் தரவுகளின் படி ஆண்டு தோறும் 2.5% அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி இந்தியாவில் 14.1 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. உலக அளவில் புற்றுநோய் பாதிப்பில் 9 ஆண்களுக்கு ஒருவர், 12 பெண்களுக்கு ஒருவர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் 10 வகையான புற்றுநோய்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலும் நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கருப்பபை வாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய், கணைய புற்றுநோய், தோல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளிட்டவை அதிக பாதிப்புகளாக கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை 2012ம் ஆண்டு 53 ஆயிரமாக இருந்த புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை 2023ம் ஆண்டு 92 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஆண்களுக்கு வயிற்று புற்று நோயும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் அதிகமாக கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாயக்கழிவு, தோல் தொழிற்சாலை, ரப்பர் உற்பத்தி கழிவுகளால் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
நொய்யல் ஆற்றில் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கார்சினோஜென்ஸ் வகை ரசாயனங்கள் அதிகம் இருப்பதால் கோவை, திருப்பூரில் கடந்த 2009ம் ஆண்டு முதல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதார நிபுணர் டாக்டர் பிரபு தலைமையிலான ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடிய வகையில் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அரசு மருத்துவமனையும், தனியார் சிகிச்சை மையங்களும் உள்ளது. ஆனால், மற்ற பகுதி மக்கள் புற்று நோயால் பாதிக்கப்படும் போது மாவட்டம் கடந்து செல்வது, அதிகபட்ச செலவு ஆகியவை காரணமாக சிகிச்சையை பெறாமல் உயிரிழக்க நேரிடுகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு முயற்சியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்கள் மட்டுமல்லாது இந்தியாவின் பீகார், உத்திரபிரதேசம், குஜராத், ஒடிசா, மேற்குவங்கம், ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த மக்கள் வசித்து வரக்கூடிய திருப்பூரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் உதவியுடன் 90 கோடி மதிப்பீட்டில் பெருச்சிபாளையம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கான கட்டுமான பணிகள் 90% நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர தயார் நிலையில் உள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட போதே புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அறுவை சிகிச்சை உள்ளிட்டவை மேற்கொள்ள இயலாமல் இருந்தது. ஆனால் தற்போது அமையவுள்ள சிகிச்சை மையத்தில் புற்றுநோய் தொடர்பான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிகிச்சை மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் பங்களிப்பாக 30 கோடி ரூபாய் அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டு ரோட்டரி பொதுநல அறக்கட்டளை சார்பில் இதுவரை அரசுக்கு 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரை சந்தித்து திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைவதன் நன்மைகள் குறித்து பேசி நிதி திரட்டப்பட்டு வருகிறது.
கதிர்வீச்சு புற்றுநோயியல் பிரிவு, உள் கதிர்வீச்சு சிகிச்சை, ஐஜிஆர்டி, மருத்துவ புற்றுநோயியல் பிரிவு, அணு மருத்துவம், சிடி ஸ்கேன், கேத் லேப் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் சிகிச்சை மையம் அமையவுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடந்த நிலையில் சிகிச்சைக்கான இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் 2025ம் ஆண்டு தொடக்கத்தில் சிகிச்சைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து திருப்பூர் ரோட்டரி பொதுநல அறக்கட்டளை தலைவர் மருத்துவர் முருகநாதன் கூறுகையில், ‘‘புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தற்போது கிடைத்திருந்தாலும் கூட சிகிச்சை பெற தொலைதூரங்களுக்கு செல்ல வேண்டும், அதிக செலவாகும் என்பதால் சிகிச்சையை ஆரம்ப கட்டத்தில் தவிர்த்து விடுகின்றனர். இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்கவே திருப்பூரில் நவீன புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு, திருப்பூர் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் திருப்பூரில் தங்கியுள்ளனர். இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையம் திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட திருப்பூரை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகள், அண்டை மாவட்ட மக்கள் மட்டுமல்லாது இங்கு தங்கியுள்ள வெளி மாநிலத்தை சேர்ந்த மக்கள் மூலமாக இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பயனடைய வாய்ப்பாக இருக்கும்.
அதிநவீன கதிர்வீச்சு வழங்கும் கருவி, ரோபோடிக் சர்ஜரி உள்ளிட்ட அனைத்து வகையான உபகரணங்களையும் கொண்டு புற்று நோய்க்கு மருந்து மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிப்பது, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு என அனைத்து சிகிச்சைகளும் இங்கேயே இலவசமாக அளிக்க முடியும். இதன் காரணமாக ஏராளமானோர் காப்பற்றப்படுவர்’’ என்றார்.
கோவை, திருப்பூர், ஈரோட்டில் அதிகரிக்கும் பாதிப்பு
புகையிலை, உணவுப்பழக்கம், மது, சரியான உடற்பயிற்சி இல்லாததால் புற்றுநோய் அதிகரித்தாலும், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நொய்யல் ஆற்றின் மாசு காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வு அறிக்கையில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்திட தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூரில் அமைக்கப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையம் முன்மாதிரியாக அமையவுள்ளது.
நமக்கு நாமே
திருப்பூரில் இந்தியாவிற்கே முன் மாதிரியாகவும், இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் பயன்பெறும் வகையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைந்து வருகிறது. இன்னும் இதனை விரிவுபடுத்தவும், மக்கள் தொகைக்கு ஏற்ப மேம்படுத்தவும் பொதுமக்கள், தொழில்துறையினர் முன் வந்து நிதி அளித்து புற்றுநோய் இல்லா சமூகத்தை உருவாக்க பங்கெடுக்க வேண்டும். என்கின்றனர் புற்றுநோய் சிகிச்சை மைய உருவாக்குவதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ள தன்னார்வலர்கள்.
The post இந்தியாவின் பல்வேறு மாநில மக்கள் வசிக்கும் திருப்பூரில் அரசு புற்றுநோய் சிகிச்சை மைய கட்டுமான பணிகள் 90% நிறைவு appeared first on Dinakaran.