மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு அமெரிக்க பயணி சாட்டிலைட் போனுடன் பயணம் செய்ய முயன்றுள்ளார். அவரது சாட்டிலைட் போனை பறிமுதல் செய்து, பயணத்தையும் பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர். இப்புகாரின்பேரில் விமானநிலைய போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் நேற்று நள்ளிரவு 11.50 மணியளவில் சிங்கப்பூருக்கு செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயார்நிலையில் இருந்தது. அதில் செல்லவேண்டிய பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து, விமானத்துக்கு அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது அமெரிக்க நாட்டை சேர்ந்த டேவிட் (55) என்ற பயணி, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்தார். அவரது உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில், இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் ஒன்றை அமெரிக்க பயணி டேவிட் வைத்திருப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால் அவரை சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. ஏனெனில், இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக சாட்டிலைட் போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. வெளிநாட்டு பயணிகள் சாட்டிலைட் போன் எடுத்து வந்தால், அவற்றை பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொண்டு ரசீது கொடுப்பார்கள். பின்னர் அவர் இந்தியாவில் இருந்து திரும்பி செல்லும்போது, அந்த போனை வெளிநாட்டு பயணியிடம் ஒப்படைப்பது வழக்கம். இந்தியாவில் வெளிநாட்டவர் உள்பட அனைவரும் சாட்டிலைட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து சாட்டிலைட் போனை உடன் எடுத்து சென்றது குறித்து அமெரிக்க பயணி டேவிட்டிடம் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவர் கடந்த சில நாட்களுக்கு அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்துள்ளார். அங்கிருந்து அந்தமானுக்கு விமானத்தில் சுற்றுலா பயணியாக சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்தமானில் இருந்து நேற்று காலை சென்னை வந்துள்ளார். பின்னர் நேற்று நள்ளிரவு சிங்கப்பூருக்கு சாட்டிலைட் போனுடன் செல்லவிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
மேலும், அவர் அமெரிக்காவில் இருந்து சாட்டிலைட் போன் எடுத்து வந்துள்ளார். அவரை எந்த விமான நிலையத்திலும் சாட்டிலைட் போனுடன் செல்வதற்கு தடை செய்யவில்லை. தனது நாட்டில் சாட்டிலைட் போனுக்கு எவ்விதத் தடையும் இல்லை என்பதால் எடுத்து வந்ததாக அமெரிக்க பயணி டேவிட் கூறியதாகத் தெரியவந்தது. எனினும், அமெரிக்க பயணியின் விளக்கத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது சிங்கப்பூர் பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர். அவரது சாட்டிலைட் போனையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அமெரிக்க பயணி டேவிட் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சாட்டிலைட் போனையும் சென்னை விமானநிலைய காவல் நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்தனர். இப்புகாரின்பேரில் விமானநிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமெரிக்க பயணி டேவிட்டிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் விமான நிலையத்தில் அமெரிக்க பயணி பிடிபட்டது குறித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
The post சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சாட்டிலைட் போனுடன் செல்ல முயன்ற அமெரிக்க பயணி: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.