×
Saravana Stores

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் சேவை எப்போது? மண்டபத்திலேயே ரயிலை நிறுத்துவதால் சுற்றுலாப்பயணிகள், மக்கள் கடும் அவதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பனில் கடலின் குறுக்கே புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி நடந்ததால் கடந்த 2022, டிச.23ம் தேதி முதல் ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால் கடந்த 23 மாதங்களாக சுற்றுலாப்பயணிகள், யாத்ரீகர்கள், பொதுமக்கள் மண்டபத்திலிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் வந்து செல்கின்றனர். கடந்த மாதம் புதிய ரயில் பாலத்தை ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் நவம்பர் மாதத்தில் ரயில் சேவை துவங்கும் என தெரிவித்தார்.

ஆனால் இதுவரை ரயில்வே பாதுகாப்பு ஆணையம் புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்யவில்லை. இதனால் புதிய ரயில் பாலத்தை திறக்க தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ரயிலுக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டிய கட்டாயத்தால் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே பயணம் செய்வதற்கு சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் பணம் செலவு செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் ராமேஸ்வரத்திற்கு சுமார் 2 ஆண்டாக வெளிமாநில பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

ராமேஸ்வரம் தீவில் முக்கியமான தொழிலான மீன் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் தொலைதூர மாவட்டங்களுக்கு மீன்களை பார்சல்கள் அனுப்ப மீனவர்கள் மண்டபம் வரை சரக்கு வாகனத்தில் கொண்டு செல்வதற்கு அதிகளவில் பணம் செலவு செய்கின்றனர். எனவே, ரயில்வே உயரதிகாரிகள் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் காலதாமதமின்றி விரைந்து ரயில் சேவையை துவக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாம்பன் புதிய பாலத்தில் ரயில் சேவை எப்போது? மண்டபத்திலேயே ரயிலை நிறுத்துவதால் சுற்றுலாப்பயணிகள், மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Pampan New Bridge ,Rameswaram ,Rameswaram Pamban ,Mandapam ,
× RELATED பாம்பன் புதிய பாலத்தில் நவம்பர் முதல் ரயில் சேவை