×
Saravana Stores

பாம்பன் புதிய பாலத்தில் நவம்பர் முதல் ரயில் சேவை

*தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்

ராமேஸ்வரம் : பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நவம்பரில் ரயில் சேவை துவங்குமென ஆய்வுக்கு பின் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலப்பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. நேற்று சென்னையில் இருந்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தனி சிறப்பு ரயிலில் காலை 7.20 மணிக்கு மண்டபம் ரயில் நிலையம் வந்தடைந்தார். கனமழை காரணமாக 8.30 மணிக்கு துவங்க வேண்டிய ஆய்வு பணி 2 மணி நேரம் தாமதமாக நடந்தது.

மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ஆய்வுக்கு புறப்பட்ட பொது மேலாளர் மண்டபம் முகாமில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஹெலிபேட் தளத்தை பார்வையிட்டார். தொடர்ந்து மண்டபத்தில் இருந்து ரயிலில் புறப்பட்டு பாம்பன் புதிய ரயில் பாலத்தின் செங்குத்து தூக்குப்பாலத்தில் இறங்கி பொறியாளர்கள் குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார். தூக்குப்பாலத்தின் தூண் உள்ளே உள்ள லிப்ட் மூலம் மேலே சென்று வின்ச் மெஷின் தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அதிகாரிகளிடமும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் ஆர்.என்.சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:புதிய ரயில் பால பணிகள் 2022ல் முடிக்க திட்டமிடப்பட்டது. கொரோனா காரணங்களால் பணிகளை முடிக்க 2 ஆண்டுகள் கூடுதலானது. தற்போது பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ள புதிய ரயில் பாலத்தை இறுதிக்கட்டமாக ஆய்வு செய்ய, ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிஆர்எஸ் அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்யவுள்ளனர்.‌ அதன்பின் ரயிலை இயக்க அனுமதி கிடைக்கும்.

நவம்பர் மாதத்தில் புதிய ரயில் பாலத்தில் ரயில் சேவை துவங்கப்பட்டு, மீண்டும் ராமேஸ்வரம்-மண்டபம் இடையே ரயில் பயணம் தொடரும். புதிய ரயில் பாலத்திற்கு அப்துல் கலாமின் பெயர் சூட்டுவது அரசின் முடிவை சார்ந்தது. ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்போது பாலத்தில் டிராபிக் ஏற்பட்டால் இரண்டாவது ரயில் வழித்தடம் பொருத்தப்படும். பழைய ரயில் தூக்குப்பாலத்தை அகற்றுவதற்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. காட்சிபடுத்துவதற்காக மீண்டும் பொருத்துவது தொழில்நுட்பரீதியாக எப்படி சாத்தியம் என தெரியவில்லை.
ராமநாதபுரம் – ராமேஸ்வரம் வரை ரயில்வே கூடுதல் பணிகள் மேற்கொள்ளும் நிலங்களில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் முறையாக சரி செய்யட்டுள்ளது. எந்த தடையும் இல்லை.
இவ்வாறு தெரிவித்தார்.

The post பாம்பன் புதிய பாலத்தில் நவம்பர் முதல் ரயில் சேவை appeared first on Dinakaran.

Tags : Pampan New Bridge ,Southern Railway ,Rameswaram ,General Manager ,RN Singh ,Pampan new ,Dinakaran ,
× RELATED பாம்பன் புதிய பாலத்தில் நவம்பர் முதல் ரயில் சேவை