×

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிப்பு: அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதி

திருச்சி: உலகம் முழுவதும் குரங்கு அம்மை குறித்த அச்சம் சற்றே குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு பிறகு தற்போது உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலை குரங்கு அம்மை ஏற்படுத்தி இருக்கிறது. ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 116 நாடுகளில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. காங்கோவில் பரவத் தொடங்கிய பாதிப்பில் தற்போது மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி இருக்கிறது.

இதுவரை 15,000 மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். தற்போது ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதை அடுத்து ஐரோப்பிய நாடுகள் கூட தங்கள் நாடுகளில் குரங்குக்கு அம்மை பாதிப்பு இருக்குமா என அச்சத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தற்போது பாதிப்பு இல்லை என்றாலும் உச்சகட்ட சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. குரங்கு அம்மை பாதிப்பு காற்றின் மூலம் பரவாது என்றாலும் ஏற்கனவே பாதிப்பில் இருக்கும் நபருடன் உடல் ரீதியான தொடர்பு, இரண்டு மீட்டருக்குள் மூன்று மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்போது நீர்த்துளிகள் மூலமாக இந்த தொற்று ஏற்படுகிறது.

கொரோனாவுக்கு பிறகு மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக இருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி இந்த பிரச்சனையை பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. கடந்த செப்டம்பரில் சந்தேகத்தின் அடிப்படையில் குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பாக தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏற்கனவே குரங்கு அம்மை பாதிப்பு இருக்கும் ஒரு நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியா திரும்பிய இளைஞர் ஒருவரை குரங்கு அம்மை தொற்று அறிகுறிகள் காரணமாக சந்தேக நபராக அடையாளம் கண்டு அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது சோதனை மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அவருக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட்- 2 எம்-பாக்ஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் குரங்கு பாதிப்பு அச்சம் எழுந்திருக்கிறது. திருச்சியில் விமான பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணி ஒருவருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் 28 வயதான திருவாரூரை சேர்ந்த இளைஞருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது. காய்ச்சல், உடலில் கொப்புளங்கள், சோர்வு ஆகியவற்றுடன் அந்த இளைஞர் காணப்பட்டதால் அவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

The post சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிப்பு: அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Charja ,Trichy ,Trichy Government Hospital ,Dinakaran ,
× RELATED கட்சி வளரவில்லை… சொத்துகள் மட்டுமே...