×

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

சென்னை : அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். சி, டி பிரிவு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ” முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வரும் நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத்திட்டங்களை கடைக்கோடித் தமிழருக்கும் கொண்டு சேர்த்திட அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்த உத்தரவின்படி,
1) ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
2) தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் 2023-2024-ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
3) “சி” மற்றும் “டி” பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Pongal ,C, D Division ,Dinakaran ,
× RELATED மன்மோகன் சிங்கின் மகத்தான பங்களிப்பை...