×

மின்வாரிய அலுவலக பணிகள் டிஜிட்டல் மயம்: தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது

வேலூர்: தமிழகம் முழுவதும் மின்வாரிய பணிகள் அனைத்தும் நேற்று முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு துறைகளில் காகித பயன்பாட்டை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டு காகிதமில்லா அலுவல் நடவடிக்கைகள் என்ற அடிப்படையில் ‘இ-ஆபீஸ் நடைமுறை’ அமலுக்கு வந்தது. அதன்படி, சட்டப்பேரவை செயலகத்தின் பல்வேறு ஆவணங்கள், கோப்புகள் கணினி மயமாக்கப்பட்டன. இதன் மூலம் காகித செலவை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் காகித கோப்புகளுக்கு பதில், மின்னணு கோப்புகளை தயாரிக்கும் நடைமுறை ‘இ-ஆபீஸ்’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேக மென்பொருள் உருவாக்கப்பட்டு அதன் மூலம், அரசு அலுவலகங்களின் வழக்கமான பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக மின்துறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மின்சாதனங்கள் கொள்முதல், கட்டுமானம் உள்ளிட்ட பணிகள், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக செய்யப்படும்போது அதற்கான பணிகளுக்கு மதிப்பீடு தயாரிப்பது, ஒப்புதல் பெறுவது, அனுமதி அளிப்பது என பல்வேறு பணிகளுக்கு காகித கோப்புகளே தயாரிக்கப்படுகின்றன. இவற்றை ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அலுவலர்கள் தயாரித்து, உயர் அதிகாரிகள் வழியாக, மின்வாரியத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவது வழக்கமாகும். கோப்புகள் தொலைந்து போவது உள்ளிட்ட சிக்கல்களை தவிர்க்கவும், காகித செலவினத்தை குறைக்கவும் மின்வாரியமும் இ-ஆபீஸ் நடைமுறையை கையில் எடுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2021ல் மின்வாரிய அலுவலகங்களில் கம்ப்யூட்டர்கள் மூலமே கோப்புகளை கையாளுவது என்பது இருந்தாலும், காகித கோப்பு நடைமுறையே நீடித்து வந்தது. எனவே, இதனை முழுவதுமாக தடுத்து நிறுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட, மண்டல மின்வாரிய அலுவலகங்களில் இருந்து, தலைமை அலுவலகத்தில் ஒப்புதல் பெற, காகித கோப்பிற்கு பதில், கணினி வழி நடவடிக்கைகள் நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மின்வாரிய அலுவலக பணிகள் டிஜிட்டல் மயம்: தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,Tamil Nadu ,Vellore ,Tamil Nadu Electronics Agency ,Dinakaran ,
× RELATED நீதிபதிகள் குடியிருப்பில் மின்கட்டண...