*ஜவுளி, மரசாமான்கள் உற்பத்தியிலும் அசத்தும் கைதிகள்
மதுரை : மதுரை மத்தியச் சிறையில் மாதம் 13 ஆயிரம் லிட்டர் அளவிற்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து கிளை சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ேமலும் ஜவுளி, மர சாமான்கள் உற்பத்தியிலும் மதுரை கைதிகள் அசத்தி வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை சிறைக்கைதிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதில் தண்டனை கைதிகள் மட்டும் 700க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களின் மறுவாழ்விற்காக சிறைக்குள் எண்ணெய் தயாரிப்பு மற்றும் ஜவுளி, மர சாமான்கள் உற்பத்தி செய்யும் கம்பெனி உள்ளது. எண்ணெய் தயாரிப்புக்காக, நவீன எண்ணெய் செக்குகள் 2 உள்ளன.
எண்ணெய் தயாரிப்பதற்கு பயன்படும் நிலக்கடலை, எள், கொப்பரைத் தேங்காய் முழுவதும் மதுரையிலேயே சிறை நிர்வாகத்தினர் கொள்முதல் செய்து விடுகின்றனர். இவற்றை பயன்படுத்தி கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் என மாதத்திற்கு சுமார் 13 ஆயிரம் லிட்டர் வரை தயாரிக்கின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகளில் அடைத்து சென்னை புழல் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள மாவட்ட சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு கிலோ நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் வெளிமார்க்கெட்டை விட 30 சதவிகிதம் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர ஆண்கள் அணியும் சட்டை, கைலிகள், துண்டுகளும் மதுரை சிறைக்குள்ளேயே தயாரிக்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை மத்தியச் சிறை உதவி கண்காணிப்பாளர் பழனி கூறுகையில், ‘‘முற்றிலும் கைதிகளின் மறுவாழ்விற்காக மட்டுமே சிறையில் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. ஒரு கைதி மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறார். இந்த பணம் அந்த கைதியின் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. மதுரை மத்திய சிறைக்குள் வந்து தண்டனை காலத்தை முடித்து விட்டு வெளியில் கைதியாக செல்லாமல் மனிதனாகவோ, தொழிலாளியாகவோ செல்வதை பார்க்க முடியும்’’ என்றார்.
விலையும் மலிவு தரமும் அதிகம்
மதுரை மத்திய சிறையில் முற்றிலும் கைதிகள் தயாரிக்கும் மர சாமான் பொருட்கள் சட்டை உள்ளிட்ட துணி வகைகள், இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள் உள்ளிட்டவை சிறையின் முன்பாக உள்ள ப்ரீடம் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள் கைதிகளால் புதிதாக தயாரிக்கப்பட்டு வெளியிடங்களை விட குறைந்த விலையில் தரமாக விற்பனை செய்யப்படுகிறது.
பால் லட்டு, மில்க் ஸ்வீட், நெய் மைசூர்பா, ஜிலேபி, பாதுஷா, அதிரசம், முறுக்கு, மிக்சர், நவதானிய உருண்டை, குளோப் ஜாமூன் உள்ளிட்ட பலகாரங்கள் அரை கிலோ, ஒரு கிலோ என பேக்கிங் செய்யப்பட்டு விற்பனையாகிறது. பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் சிறைவாசிகளுக்கு அந்த பொருட்களின் விலையில் 20 சதவீதம் கூலியாக வழங்கப்படுகிறது. இத்தொகை அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணம் கைதிகளின் உறவினர்கள், பிள்ளைகள் படிப்பு செலவிற்கு உதவியாக இருக்கும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
prisoners produce 13 thousand liters of oil per month in Madurai Central Jail
The post சிறைக்கைதிகளின் மறுவாழ்விற்கு சிறப்புத் திட்டங்கள் மாதம் 13 ஆயிரம் லிட்டர் எண்ணெய் மதுரை மத்தியச் சிறையில் தயாரிப்பு appeared first on Dinakaran.